×

டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ்த்தாள் தகுதி தேர்வை எழுதுவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ்தாள் தகுதி தேர்வை எழுதுவதில் இருந்து மாற்றுதிறனாளிகளுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசின் மனித வள மேலாண்மை துறை அரசு செயலாளர் மைதிலி கே.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:மாநிலத்தின் தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ்மொழி தகுதித்தாள் கட்டாயமாக்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டன. இதற்கிணங்க டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ் தொழி தாளினை கட்டாய தாளாக இணைக்கப்பட்டது. செவித்திறன் குறைபாடு உள்ளவர்களின் பெற்றோர் சங்கத்தின் மனுவில்,‘‘காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்று திறனாளிகள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளை கற்க சிரமப்படுவார்கள் என்றும், இம்மாணவ மாணவியர்கள் சிலர் முன்பருவபள்ளி முதல் பட்டப்படிப்பு வரை முழுமையாக ஆங்கில வழிக்கல்வியில் மட்டுமே கல்வி கற்றிருப்பார்கள் என தெரிவித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற குரூப் 4 பதவிகளுக்கான போட்டி தேர்வில் இத்தேர்வர்களுக்கு தமிழ் மொழி தகுதி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து அவர்களுக்கு என தனியாக பொது ஆங்கில தாளினை நடத்த கோரியுள்ளனர்.

இக்கோரிக்கை குறித்து மாற்று திறனாளிகள் நலத்துறையுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் வழங்கியுள்ள குறிப்புரையினை ஏற்று” கட்டாய தமிழ்மொழி தகுதி தேர்வினை எழுதுவதற்கு மாற்று திறனாளிகளுக்கு விலக்களித்து ஆணையிடப்படுகிறது. அதன்படி டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் குரூப் 1, குரூப் 2, 2ஏ இரண்டு நிலைகளை கொண்ட தேர்வுகளில் முதன்மை எழுத்து தேர்வில் கட்டாய தமிழ்மொழித்தாளானது தகுதி தேர்வாக நடத்தப்படுகிறது. இது போன்ற தேர்வுகளில் கட்டாய தமிழ்மொழி தகுதி தாளினை எழுதுவதிலிருந்து மாற்று திறனாளிகளுக்கு விலக்களிக்கப்படுகிறது. குரூப் 3,  குரூப் 4, குரூப் 7பி, குரூப் 8 போன்ற ஒரே நிலை கொண்ட தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாளானது தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வாக நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளில் போர்டு, பல்கலைக்கழகங்களில் ஆங்கில மொழி பாடம் மட்டுமே படித்த மாற்று திறனாளிகளுக்கு தமிழ் மொழி தாள் எழுதுவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

அதற்கு பதில் ரேங்கிங் மதிப்பீடு செய்வதற்காக அவர்களுக்கு என்று தனியாக பொது ஆங்கில தேர்வு நடத்தப்படும். டிஎன்பிஎஸ்சி மட்டுமல்லாமல் மற்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் மற்றும் நியமன அலுவலர்களால் தேவைப்படும் நேர்வுகளில் நடத்தப்படும் எழுத்து தேர்வுகளும் பொருந்தும். இவ்விலக்கு 40 சதவீதத்திற்கும் குறைவான குறைபாடுகளை கொண்ட மாற்று திறனாளிகளுக்கு பொருந்தும். இவ்விலக்கினை பெற விரும்பும் மாற்று திறனாளிகள் உரிய மாற்று திறனாளி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : In all competitive exams including DNBSC Exemption for persons with disabilities from writing the Tamil paper Eligibility Test: Government of Tamil Nadu Order
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...