பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்; நடிகையின் புகாரில் விளக்கம் அளிக்க கேரள அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் தொடர் விசாரணையும் நடைபெறுகிறது. இம்மாத இறுதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை கடந்த சில நாட்களுக்கு முன் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில் பலாத்கார வழக்கில் முதலில் இருந்த வேகம் தற்போது இல்லை. விசாரணையில் ஆளுங்கட்சியினர் தலையிடுவது தான் இதற்கு காரணமாகும். எனவே உயர்நீதிமன்றம் தலையிட்டு முறையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது: விசாரணையில் எந்த பின்னடைவும் ஏற்படவில்லை.

பாதிக்கப்பட்ட நடிகை தேவையில்லாமல் பயப்படுகிறார். எனவே அவர் தன்னுடைய மனுவை வாபஸ் பெற வேண்டும் என்று குறிப்பிட்டார். ஆனால் அரசுத் தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி சியாத் ரகுமான், மனுவை வாபஸ் பெறும்படி நடிகையிடம் கேட்டுக் கொள்ள முடியாது, இது தொடர்பாக அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அடுத்த வாரம் எர்ணாகுளம் மாவட்டம் திருக்காக்கரை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் காங்கிரஸ், பாஜக உள்பட எதிர்க்கட்சியினரும் இந்த விவகாரத்தை தங்களது தேர்தல் பிரச்சார ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர். இதையடுத்து நடிகையை சமாதானப்படுத்தும் முயற்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டு வருகிறது.  இந்தநிலையில் இன்று காலை சுமார் 10 மணியளவில் அந்த நடிகை திருவனந்தபுரத்தில் உள்ள அலுவலகத்தில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார்.

Related Stories: