×

குர்ஆனை வீட்டில் மட்டும் சொல்லிக் கொடுங்கள் மதரஸா வார்த்தைக்கே முடிவு கட்ட வேண்டும்: அசாம் முதல்வர் சர்ச்சை பேச்சு

புதுடெல்லி: ‘மதரஸா என்ற வார்த்தைக்கு முடிவு கட்ட வேண்டும், குர்ஆனை வீட்டில் மட்டும் சொல்லித் தர வேண்டும்’ என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறி உள்ளார்.அசாம் மாநில பாஜ முதல்வரான ஹிமந்தா பிஸ்வா, டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: மதரஸாவில் படித்தால் நீங்கள் டாக்டர், இன்ஜினியர் ஆக முடியாது என குழந்தைகளிடம் சொல்லிப் பாருங்கள், அவர்களே மதரஸாவுக்கு போக மாட்டார்கள். மதரஸா என்ற வார்த்தைக்கே முடிவு கட்ட வேண்டும். குழந்தைகளுக்கு குர்ஆன் கற்றுக் கொடுங்கள். ஆனால் அதை உங்கள் வீட்டில் மட்டும் வைத்து கற்றுக் கொடுங்கள். பள்ளிக்கூடங்களில் பொதுவான கல்வி கற்பிக்கப்பட வேண்டும். முஸ்லிம் குழந்தைகளும் புத்திச்சாலியாக இருக்கிறார்கள்.

அதற்கு காரணம், இங்கு அனைத்து முஸ்லிம்களும் இந்துக்கள்தான். இந்தியாவில் யாரும் பிறக்கும் போதே முஸ்லிமாக பிறப்பதில்லை. எனவேதான் அவர்கள் புத்திச்சாலியாக இருந்தால் அது அவர்கள் இந்துவாக இருந்ததன் பலன் என்றே நான் கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.  அசாமில் கடந்த 2020ம் ஆண்டு மதச்சார்பற்ற கல்வி அமைப்பை கொண்டு வரும் வகையில், அனைத்து அரசு மதரஸாக்களும் கலைக்கப்பட்டு அவை பொதுப்பள்ளிகளாக மாற்ற அம்மாநில அரசு முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Madrasa ,Assam , Recite the Quran at home only To the word madrasa Concluding Remarks: Assam Chief Minister Controversial Speech
× RELATED பெரம்பலூரில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு கூட்டு தொழுகை