நீலகிரி: உதகையில் நடைபெற்று வரும் 124-வது மலர் கண்காட்சி நாளையுடன் நிறைவடைய உள்ளதை அடுத்து கண்காட்சிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். கோடையை கொண்டாடும் விதமாக உதகை தாவரவியல் பூங்காவில் மலர்கண்காட்சி களைகட்டுகிறது. கடந்த 20-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்காட்சியை தொடங்கி வைத்து மலர் மாடங்களை பார்வையிட்டார். அதன்பின், ஆயிரக்கணக்கான மக்கள் மலர்கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர்.
கண்காட்சியில் இடம்பெற்றுள்ள காய்கறிகள் மூலம் அலங்கரிக்கப்பட்ட வள்ளுவர்கோட்டம், காட்டெருமை மற்றும் ஹாலந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட துலிப் மலர்கள், மேரிகோல்ட் உள்பட 275 வகையான பலவண்ண மலர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் 4-வது நாளாக கோலாகலமாக நடைபெற்று வரும் உதகை மலர் கண்காட்சி, நாளையுடன் நிறைவடைய உள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்து உதகைக்கு வந்த சுற்றுலா பயணிகள், உதகை தாவரவியல் பூங்காவில் குவிந்துள்ளனர். 2 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் உதகை மலர் கண்காட்சியில் பூத்துக்குலுங்கும் பல வண்ணமலர்கள் சுற்றுலா பயணிகளை மெய்மறந்து ரசிக்க வைக்கிறது.