×

பாஜகவை சேர்ந்த நடிகையான ஹேமமாலினி கன்னம் போல் இருக்கு சாலை : சட்டீஸ்கர் காங். அமைச்சர் பேச்சால் சலசலப்பு

ராய்ப்பூர்:சட்டீஸ்கரின் சாலைகள் பாஜகவை சேர்ந்த நடிகை ஹேமமாலினியின் கன்னம் போல் இருப்பதாக அமைச்சர் கவாசி லக்மா பேசியது, மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஸ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில வர்த்தகம், தொழில்துறை மற்றும் கலால் துறை அமைச்சர் கவாசி லக்மா, பஸ்தாரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‘கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் பகுதியில் சாலை வசதி கிடையாது. நாராயண்பூரிலிருந்து பஸ்தார் வரை பல கிலோமீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைத்துள்ளோம்.

இந்த சாலைகள் பாலிவுட் நடிகை (தற்போது பாஜக எம்பி) ஹேமா மாலினியின் கன்னங்களை போன்று உள்ளது’ என்று கூறினார். அந்த விழா மேடையில் ​முதல்வர் பூபேஷ் பாகேலும் இருந்தார். அமைச்சர் பேசிய வீடியோ வைரலானதை அடுத்து, எதிர்க்கட்சியான பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‘மதுபானத்துறை அமைச்சரின் கருத்து, பெண்களைப் பற்றிய அவரது மனநிலையையும், கண்ணோட்டத்தையும் பிரதிபலிக்கிறது’ என்றார்.

முன்னதாக, லாலு பிரசாத் யாதவ், பீகார் முதல்வராக இருந்தபோது, ​​ஹேம மாலினி குறித்து இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்திருந்தார். அப்போது அவர் பேசுகையில், ‘ஓம்புரியின் கன்னங்கள் போல் இருந்த பீகார் சாலைகள், தற்போது ஹேம மாலினியின் கன்னங்கள் போல் மாற்றப்படும்’ என்றார். கடந்த ஆண்டு, சிவசேனாவைச் சேர்ந்த மகாராஷ்டிர அமைச்சர் குலாப்ராவ் பாட்டீல், ஜல்கான் மாவட்டத்தில் உள்ள தனது தொகுதியின் சாலைகளை ஹேமமாலினியின் கன்னங்களுடன் ஒப்பிட்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Hemamalini ,Bajaga ,Sattiskar Kong , BJP, Hemalini, Kannam, Chhattisgarh, Congress
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு...