மதுரை தம்பதியிடம் ரூ.10 கோடி கேட்டு தனுஷ் நோட்டீஸ்

சென்னை: மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர், நடிகர் தனுஷ் தங்களின் மகன் எனக்கூறி மதுரை மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் தங்களுக்கு தனுஷ் மாதம் ரூ.60 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர். ஆனால் இந்த வழக்கு தள்ளுபடியானது. இந்த உத்தரவுக்கு எதிராக கதிரேசன் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் கதிரேசன் - மீனாட்சி தம்பதியின் வழக்கை ரத்து செய்யக்கோரி, தனுஷ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், கதிரேசன் தம்பதி மேலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனிடையே நடிகர் தனுஷுக்கும், கஸ்தூரி ராஜாவுக்கும் கதிரேசன் தம்பதியினர் சமீபத்தில் அனுப்பிய நோட்டீசில், கஸ்தூரிராஜா நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவு பெற்றதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் கஸ்தூரி ராஜா தரப்பில், கதிரேசன் தம்பதிக்கு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், தங்களின் மீது கூறிய குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு மன்னிப்பு கோராவிட்டால் ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: