சாதாரண கட்டண பேருந்துகளில் 61% மகளிர் இலவச பயணம்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்

சென்னை:  மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் உள்ள கிளைகளின் செயல்பாடுகள் குறித்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் போக்குவரத்து இயக்குனர் அன்பு ஆபிரகாம் மற்றும் மேலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: பெண்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காக, மகளிருக்கு சாதாரண கட்டண பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஆரம்பத்தில் 40% பயணம் மேற்கொண்ட மகளிரின் எண்ணிக்கையானது, தற்பொழுது 61% ஆக உயர்ந்துள்ளது. போக்குவரத்து கழகங்களின், நிதிநிலைமையை கருத்தில் கொண்டு, இதற்குரிய நிதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. பொதுமக்களிடம் நேரடியாக தொடர்புடைய துறை நமது போக்குவரத்து துறை. அதனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த மகளிர் இலவச பயணம் செய்யும் திட்டத்தை நன்முறையில் செயல்படுத்தும் விதமாக சாதாரண கட்டணப் பேருந்துகளை தட இழப்பு இல்லாமல், இயக்கிட வேண்டும்.

மேலும், சாதாரண கட்டணப் பேருந்துகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பேட்டா வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பு, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்படும். இவ்வாறு கூறினார்.

Related Stories: