திருக்கோவிலூர் நகராட்சியில் ஒருவருடமாக கிடப்பில் போடப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால் பணி-பொதுமக்கள் அவதி

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட 14வது வார்டு பகுதியில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதிமுக ஆட்சியில் கழிவுநீர் வாய்க்கால் பணி அண்ணா நகர் பகுதியில் அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. அதற்கு முன் இரு புறமும் இருந்த வாய்க்காலை பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. இதனையடுத்து சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் பணிகள் நிறுத்தப்பட்டது.

பின்னர் இன்று வரை பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகமாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் தோண்டப்பட்ட பள்ளத்தில் சிமெண்ட் சாலை சரிந்து விழுந்துள்ளது. ஆகையால் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  ஒரு வருடமாக கிடப்பில் போடப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால் பணியை நகராட்சி நிர்வாகம் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: