சென்னை: மதுராந்தகம் அடுத்த ஒரத்தி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (40). நெல் வியாபாரி. இந்த பகுதியில் விவசாயிகளிடம் வாங்கும் நெல் மூட்டைகளை தென்காசியை சேர்ந்த பட்டு ராஜ் (55) என்பவருக்கு மொத்த விற்பனை செய்து வந்தார். பட்டுராஜ், ரமேஷுக்கு ஒரு கோடி ரூபாய் வரை கடன் வைத்து இருந்ததாகதெரிகிறது. இந்நிலையில், ரமேஷ், பட்டுராஜிடம் தனக்கு சேர வேண்டிய பணத்தை கேட்டு வந்ததாகவும், ஆனால் அவர் இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என பல மாதங்களாக இழுத்தடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த ரமேஷ் பட்டுராஜை நைசாக பேசி தனது கிராமத்திற்கு நேற்று முன்தினம் வரவழைத்துள்ளார். அவர் வந்தவுடன் ஒரத்தி அருகே ஆனந்தமங்கலத்தில் உள்ள சமணர் குன்று பகுதியில் இருவரும் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இந்நிலையில் ரமேஷ், டவலால் பட்டுராஜ் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, அக்கம் பக்கத்தினர் ஒரத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபகுதியில், பதுங்கியிருந்த கொலையாளி ரமேஷை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.