சென்னை: ஆதரவில்லாமல் தலைநகர் டெல்லியில் சுற்றி திரிந்த 52 நபர்களை ‘காவல் கரங்கள்’ மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் மீட்டு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று அவர்களின் குடும்பத்தினருடன் சேர்த்து வைத்தார். சென்னை மாநகர காவல் துறை சார்பில் ‘காவல் கரங்கள்’ என்ற உதவி மையம் செயல்பட்டு வருகிறது.அந்த வகையில் கடந்த ஏப்ரல் 20ம் தேதி தனியாக சுற்றி திரிந்த வடமாநிலத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 176 நபர்களை கண்டறிந்து தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் தங்க வைத்து பராமரித்து காவல் கரங்கள் உதவியுடன் அவர்களின் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தொண்டு நிறுவனம் உதவியுடன் டெல்லியில் சுற்றி திரிந்த தமிழகத்தை சேர்ந்த 13 பேர் ஆந்திராவை சேர்நத் 32 பேர், கேரளாவை சேர்ந்த 2 பேர், கர்நாடகாவை சேர்ந்த 6 நபர்கள் என மொத்தம் 52 நபர்களை மீட்டு ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மீட்கப்பட்ட 52 நபர்களை வேப்பேரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர்களின் குடும்பத்தினருடன் நேற்று சேர்த்து வைத்தார். அப்போது அவர்களுக்கு தேவையான பொருட்களும் வழங்கப்பட்டது.