×

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் மண்டல இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம்

சென்னை: செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக மண்டல இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம் இன்று   நடைபெற்றது. செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் இன்று (18.5.2022) மண்டல இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில், செய்தித்துறை அமைச்சர் தனது தலைமையுரையில்,  தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான இந்த அரசு,  விடுதலைப் போராட்டத் தியாகிகள், மொழிக் காவலர்கள் மற்றும் தமிழறிஞர்கள் ஆகியோரை கௌரவிக்கும்  பொருட்டும், வருங்காலச் சந்ததியினர் அறிந்து, தெரிந்துகொள்ளும் வகையிலும்,   அவர்களுக்கு சிலைகள் மற்றும் அரங்கங்கள் அமைக்க பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது.  அதனடிப்படையில், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட  அறிவிப்புகளைக் காலதாமதமின்றி விரைந்து முடித்து அவற்றைச் செயல்படுத்திட உடனடியாக   நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 மண்டல இணை இயக்குநர்கள் மாவட்ட  ஆட்சியர்களைத் தொடர்பு கொண்டு, இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  பணிகளில் ஏதேனும் இடர்பாடுகள் மற்றும் சந்தேகங்கள் இருந்தால் மண்டல இணை இயக்குநர்களும், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களும் தலைமையிடத்தில் இருந்து அறிவுரைகளைப் பெற்று  பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கப்பட்ட “தமிழரசு” இதழ், தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள், கொள்கைகள் மற்றும் அரசாணைகள் ஆகியவற்றை உள்ளடக்கி, உண்மைத் தகவல்களைத் தாங்கி காலப் பெட்டகமாகத் திகழ்வதால், “தமிழரசு” இதழைப் பொதுமக்களிடம் அதிக அளவில் விளம்பரப்படுத்த வேண்டும்.  மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள் போன்றோரை அணுகி, அவர்களைத் “தமிழரசு” இதழை வாங்கச் செய்து,  “தமிழரசு” இதழ் சந்தாவை அதிகப்படுத்த வேண்டும்.  மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சித்லைவர்கள் மூலம் “தமிழரசு” இதழ் சந்தா சேர்க்க தங்களுக்கு அளிக்கப்பட்ட இலக்கினைத் ஒரு வார காலத்திற்குள் முடிக்க வேண்டும்.    

மாவட்டங்களில் உள்ள, மக்களால் அறியப்படாத  விடுதலைப் போராட்டத் தியாகிகள், மொழிக் காவலர்கள்,  தமிழறிஞர்கள் மற்றும் முக்கியத் தலைவர்கள் ஆகியோர்களின் புகைப்படங்களைப் பெற்று, அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு  தயார் செய்து,  மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களான மாவட்ட ஆட்சியரகம், முக்கியப் பேருந்து நிலையங்களில் உள்ள வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் உரிய அனுமதி பெற்று புகைப்படக் கண்காட்சியை அமைக்கவும், காலப்பேழையாக தயாரித்து வைக்கவும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  

மாவட்டங்களில் தனியார் பொருட்காட்சிகள் நடத்திட அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி தலைமையிடத்தில் உரிய அனுமதி பெற்று நடத்திட வேண்டும் எனவும் அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியினை அர்ப்பணிப்புடன் எவ்விதத் தொய்வுமின்றி விரைவாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும்,   இந்த ஆண்டில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ள அறிவிப்புகளையும் செய்தித் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவித்துள்ள அறிவிப்புகளையும் விரைந்து செயல்படுத்தத் திட்டம் வகுத்து செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் செயலாளர் மகேசன் காசிராஜன், முன்னிலையுரையாற்றினார். முன்னதாக, செய்தி மக்கள் தொடர்புத்துறையின்  இயக்குநர்  வீ.ப.ஜெயசீலன்,  வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில், கூடுதல் இயக்குநர்கள் அம்பலவாணன், பாண்டியன், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Zonal Co- ,District News ,Press Minister ,Saminathan , Saminathan, Chief, Public Relations Officer, Job Inspection, Meeting
× RELATED தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்பட கண்காட்சி