×

நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர்

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை துறையின் அங்கமாக உள்ள சாய ஆலைகள்,பிரின்டிங், வாஷிங் நிறுவனங்கள், மாசுகட்டுப்பாடு வாரிய அனுமதி பெறவேண்டும். கழிவுநீரை, ‘ஜீரோ டிஸ்சார்ஜ்’ தொழில் நுட்பத்தில் சுத்திகரிக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆயினும், முறைகேடு நிறுவனங்கள் எண்ணிக்கை குறையவில்லை. குடோன்கள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில், பிளாஸ்டிக் டிரம் வைத்து, பட்டன்,ஜிப் போன்றவற்றுக்கு சாயமேற்றுகின்றனர். சுத்திகரிக்காத சாயக்கழிவுநீர், நீர்நிலைகளில் திறந்து விடப்பட்டு, இயற்கை பாழ்படுத்தப்படுகிறது. மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு பயந்து, முறைகேடு நிறுவனங்கள், சாயக்கழிவுநீரை, இரவு நேரங்களில் ரகசியமாக திறந்துவிடுகின்றன.

இதை தெரிந்துக்கொண்ட மாசுக்கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள், திடீர் ஆய்வு மேற்கொண்டு, மின் இணைப்பு துண்டிப்பு, நிறுவனங்களுக்கு ‘சீல்’ என அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சமீப காலமாக முறைக்கேடாக சாயக்கழிவு நீர் வெளியேற்றுவது குறைந்திருந்தது. இந்நிலையில், திருப்பூர் சந்தைப்பேட்டை அருகே உள்ள நொய்யலாற்றில் நேற்று சாயக்கழிவு நீர் கலந்து சென்றது. மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, சாயக்கழிவுநீர் திறந்துவிட்ட நிறுவனத்தை கண்டு பிடித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Noyel River , Leachate water in the Noyyal River
× RELATED திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் கலக்கும் சாய ஆலையின் கழிவுநீர்..!!