×

பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கோரி வழக்கு தருமபுரம் ஆதீனத்தின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு  போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி  விண்ணப்பிக்கும்படி தருமபுரம் ஆதீனத்துக்கு அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், ஆதீனத்தின் மனுவை பரிசீலித்து உரிய பாதுகாப்பு வழங்குமாறு மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து ஆதீனகர்த்தர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முன்வைத்த கோரிக்கையை ஏற்று, பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி மே 22ம் தேதி பட்டின பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  இந்நிலையில், பட்டின பிரவேச நிகழ்ச்சியின்போது சட்டம் -ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த  ராஜா சிவபிரகாசம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது  மனுவில், தமிழகத்தில் உள்ள அனைத்து மடங்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்துக்களின் மரபு, பண்டிகை, நடைமுறைகளில் தலையிட தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி,  பாதுகாப்பு கோரி இதுவரை ஆதீனத்தின் தரப்பில் விண்ணப்பிக்கவில்லை. பாதுகாப்பு கோரி விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.
 
இதையடுத்து, இந்த வழக்கில் தருமபுரம் ஆதீனத்தை எதிர்மனுதாரராக தாமாக முன்வந்து சேர்த்த நீதிபதிகள், பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கோரி மாவட்ட நிர்வாகத்துக்கு விண்ணப்பிக்கும்படி தருமபுரம் ஆதீனத்துக்கு உத்தரவிட்டனர். ஆதீனத்தின் சார்பில் அளிக்கப்படும் விண்ணப்பத்தை பரிசீலித்து பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்திற்கு  உத்தரவிட்டு  வழக்கை முடித்துவைத்தனர்.

Tags : Dharumapuram Adenam ,Pattinu Pravehu event ,High Court ,Government of Tamil Nadu , Dharmapuram Aadeenam's request to consider case seeking protection for hunger strike: HC orders Tamil Nadu government
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...