ஜோலார்பேட்டை : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர், எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. காலையிலும் மாலையிலும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடத்தப்படுகிறது. மேலும் இந்தக் கோயிலில் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் உள்ளார். மேலும் செவ்வாய், வெள்ளி மற்றும் அமாவாசை, பவுர்ணமி தினங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறுகிறது. மேலும் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் விழா நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோயில் பூசாரி சுப்பிரமணி வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு பூஜை செய்துவிட்டு கோயிலை பூட்டி விட்டுச் சென்றுள்ளார். நேற்று காலை கோயிலுக்கு வரும் போது மர்ம நபர்கள் யாரோ கோயில் முன்பு இருந்த சூலத்தை எடுத்து கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அம்மன் கழுத்திலிருந்த 4 தாலி, கால் காசு என 3 சவரன் அளவிலான தங்க நகைகளையும், கோயிலின் வெளியே இருந்த உண்டியலை உடைத்து பக்தர்களின் காணிக்கையான சுமார் ₹30 ஆயிரத்தையும் மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து கோயில் பூசாரி சுப்பிரமணி மற்றும் ஊர் பொதுமக்கள் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், சூலத்தை காவல் நிலையம் எடுத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். அடுத்தவாரம் அம்மனுக்கு விழா நடத்துவதற்காக உண்டியல் பணத்தை எடுக்காமல் வைத்திருந்த நிலையில் மர்ம நபர்கள் கோயிலின் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த நகைகளையும், உண்டியல் பணத்தையும் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.