திருப்பத்தூர் : தற்போது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிடும் உணவுகள் மற்றும் குளிர்பானங்களில் அதிகளவில் கலப்படம் விற்பனை செய்யப்படுவதாகவும், இதை தடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது. நேற்று திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஜெயகாந்தன் கோடை வெயிலுக்கு ஏரிக்கோடி பகுதியில் உள்ள ஒரு கடையில் குளிர்பானம் வாங்கி உள்ளார். அது உள்ளூரில் தயாரித்த குளிர்பானம் என்பது தெரியவந்து. அதனை திறக்க முயன்றபோது அதில் பூச்சி மற்றும் புழு நெளிந்து கொண்டு இருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக கடைக்காரரிடம் தட்டிக்கேட்டுள்ளார். அதற்கு அவர், ‘இதனை நாங்கள் தயார் செய்யவில்லை. எங்களுக்கு தர்மபுரியில் இருந்து வாகனத்தில் கொண்டுவந்து வழங்குகின்றனர். அதை வைத்து நாங்கள் விற்பனை செய்து வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளார். இதேபோல் திருப்பத்தூர் பகுதிகளில் போலி குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உடனடியாக இதனை உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்து மனித உயிர்களை பலி வாங்க கூடிய குளிர்பான உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
