×

மீஞ்சூர், பொன்னேரியில் பயங்கரம் அடுத்தடுத்த 2 ரவுடிகள் படுகொலை

பொன்னேரி: பொன்னேரி, மீஞ்சூரில் அடுத்தடுத்து 2 ரவுடிகள் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள வாயலூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (38). பிரபல ரவுடியான இவர் மீது 3 கொலை உள்பட 28 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மலர் என்ற மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
மூர்த்தி, திருவெள்ளைவாயல் டாஸ்மாக் கடை அருகே பார் நடத்திவந்தார். இன்று காலை 9 மணியளவில் பாரில் மூர்த்தி பேசிக்கொண்டிருந்தபோது 10 பேர் கொண்ட கும்பல் வந்து மூர்த்தியை வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் சம்பவ இடத்திலேயே மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், மீஞ்சூர் இன்ஸ்பெக்டர்கள் சிரஞ்சீவி, பன்னீர்செல்வம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மூர்த்தியின் சடலத்தை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூர்த்தி கொலைக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு கொலை;
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே வேண்பாக்கம், பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜவஹர் (40). இவர் பிரபல ரவுடி. பொன்னேரி, மீஞ்சூர் உள்பட பல காவல் நிலையங்களில் 2 கொலை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல்வேறு  வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் தனது வீட்டில் கஞ்சா மற்றும் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் இவரது கூட்டாளி கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.

இதுசம்பந்தமாக தேடியபோது ரவுடி ஜவஹர் தலைமறைவாகி விட்டார். இந்தநிலையில், நேற்றிரவு வேண்பாக்கம் பள்ளம் பகுதியில் வெட்டு காயங்களுடன் ஜவஹர் இறந்து கிடந்தார். திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண்குமார் தலைமையில், பொன்னேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். தொழில் போட்டி, முன்விரோதம் காரணமாக ரவுடி ஜவஹர் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எஸ்பி தலைமையில் தனிப்படையினர் மர்ம கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Minsur ,Ponneri , Minsur, Ponneri, 2 Rowdy, Assassination
× RELATED பூந்தமல்லி அருகே வாகனத்தில் எடுத்து...