×
Saravana Stores

இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம்: சப் – கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி

பொன்னேரி.: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கண்ணம்பாக்கம் கிராமத்தில் பட்டியலின மக்கள் நீண்ட காலமாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கண்ணம்பாக்கம் கிராம மக்கள் ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தினருடன் இணைந்து காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அப்போது, பட்டியல் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க மறுக்கும் கும்மிடிப்பூண்டி வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது. மேலும், மழைக்காலங்களில் கிராமத்தில் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருவதாகவும் அதிகாரிகள் பட்டா வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி கோட்டாட்சியர் அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

இதில், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொன்னேரி சப் கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த் அழைத்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். கிராமத்தில் ஏற்கனவே சிலருக்கு பட்டா வழங்கியுள்ளதாகவும், அதிகாரிகளைக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக சப் கலெக்டர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. கிராம மக்கள் போராட்டம் காரணமாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

The post இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம்: சப் – கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Kannambakkam ,Kummidipoondi ,Ponneri District Collector ,Adithamizhar Liberation Movement ,
× RELATED பொன்னேரி முருகன் கோயிலில் 2 ஜோடிகளுக்கு திருமணம்: எம்எல்ஏ நடத்தி வைத்தார்