×

வத்தல்மலையில் அரசு பஸ் இயக்கி சோதனை ஓட்டம்-மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி

தர்மபுரி : தர்மபுரி வத்தல்மலையில், அரசு பஸ் இயக்கி சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. இதனால், மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தர்மபுரி நகரில் இருந்து 19 கிமீ தொலைவிலும், கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் உயரத்திலும் வத்தல்மலை உள்ளது. இங்குள்ள பெரியூர், பால்சிலம்பு, சின்னாங்காடு, குள்ளனூர், நாயக்கனூர், அரங்கனூர் உள்ளிட்ட 13 மலைக் கிராமங்களில், பழங்குடியின மக்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இங்கு சில்வர்ஓக் மரங்கள், காபி பயிர், சோளம், கேழ்வரகு, சாமை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. வத்தல்மலை அடிவாரத்தில் இருந்து மலைப்பாதை வழியாக சுமார் 5 கிமீ தூரம் பயணித்தால், மலை உச்சியை அடையலாம். அங்கிருந்து ஒவ்வொரு கிராமத்துக்கும் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

வத்தல்மலைக்கு கடந்த 2011ம் ஆண்டு வரை சாலை வசதி கிடையாது. அடர்ந்த வனப்பகுதியின் வழியாக 5 கிமீ தூரம் நடந்து வந்து, அடிவாரத்தில் இருந்து பஸ் மூலம், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. இதனால், வத்தல்மலைக்கு சாலை வசதி செய்து கேட்டு, மலைவாழ் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மலைவாழ் மக்களே ஒன்றுசேர்ந்து மண் சாலை அமைத்தனர்.

அதன் பின்னர், கடந்த 2011-2012ம் ஆண்டு அடிவாரத்தில் இருந்து வத்தல்மலை மேல் பகுதி வரை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வனத்துறை சார்பில் தார்சாலை அமைக்கப்பட்டது. மலை அடிவாரத்தில் இருந்து 23 கொண்டை ஊசி வளைவுகளுடன் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், கொண்டை ஊசி வளைவில் மினிபஸ் கூட திரும்ப முடியாத வகையில், சாலை குறுகலாக சாலை அமைக்கப்பட்டதால் பஸ்கள் இயக்கப்படவில்லை. இருசக்கர வாகனம், கார், ஜீப் போன்ற சிறிய வாகனங்கள் மட்டும் மலைப்பாதையில் சென்று வருகின்றன.     இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், வத்தல்மலைக்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அப்போது மலைவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று, வத்தல்மலை சாலையில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நேற்று, தர்மபுரி கலெக்டர் உத்தரவின்பேரில், வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் ஜெயபால் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், 40 இருக்கைகள் கொண்ட சிறிய பஸ்சை, 30 கிமீ வேகத்தில் இயக்கி சோதனை செய்தனர்.

அடிவாரத்தில் இருந்து வத்தல்மலை பெரியூர், நாயக்கனூர் வரை இயக்கப்பட்ட இந்த பஸ்சில், அதிகாரிகள் பயணம் செய்தனர். அடிவாரத்தில் இருந்து வத்தல்மலைக்கு செல்ல 50 நிமிடம் ஆனது. அரசு பஸ்சை பார்த்தவுடன் வத்தல்மலை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.வத்தல்மலைக்கு பஸ் இயக்குவது குறித்து கலெக்டர் முடிவு செய்வார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Wattalmalai-hill , Dharmapuri: At Dharmapuri Wattalmalai, a government bus driver test run took place yesterday. Thus, the hill people are happy.From Dharmapuri city
× RELATED கலவர சம்பவங்கள் நிகழ்ந்து ஓராண்டு...