விமான நிலையத்தின் 6வது மாடியில் இருந்து விழுந்த மாணவர் பலி

சென்னை: சென்னை விமான நிலையத்தின் 6வது மாடியில் இருந்து கீழே விழுந்து கல்லூரி மாணவர் இறந்தார். சென்னை சர்வதேச விமான நிலையத்தின் வருகை பகுதிக்கு முன்னால் கார் பார்கிங் பகுதியில்  நேற்று காலை 9 மணி அளவில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் இறந்துகிடந்தார். அவர் முகத்தில் பலத்த காயம் இருந்தது. அதை பார்த்த விமான பயணிகளும், விமான நிலைய ஊழியர்களும் சென்னை விமான நிலைய போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சபரி கணேஷ் (20) என்பது தெரிந்தது. இவர் வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ படித்து வந்தார். புதிய கட்டுமான பணி நடக்கும் பகுதியில் பயணிகள் உட்பட யாரும் செல்ல முடியாது. அப்படியிருந்தும் சபரி கணேஷ் எப்படி உள்ளே சென்றார் என்பது தெரியவில்லை. விமான நிலைய வளாகத்திற்குள் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: