×

காவல்துறையின் சிறப்பான நடவடிக்கையால் தமிழகத்தில் கடந்த ஓராண்டில் குற்றங்கள் குறைந்துள்ளது: டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

சென்னை:  சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட   இடங்களில் ரயில் பயணிகளிடம் 67 குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளது. அந்த குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை ரயில்வே போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 51 லட்சத்து 78 ஆயிரத்து 570 ரூபாய் மதிப்பிலான 103.326 சவரன் நகைகள், 75 கிராம் வெள்ளி பொருட்கள், 175 செல்போன்கள், 6 லேப்-டாப்கள், ரூ.4.65 லட்சத்து ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகை உள்ளிட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை கீழ்ப்பாக்கம் தனியார் திருமணம் மண்டபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக ரயில்வே கூடுதல் டிஜிபி வனிதா தலைமை வகித்தார். ரயில்வே பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. சந்தோஷ் என்.சந்திரன் உள்ளிட்ட ரயில்வே போலீசார் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு திறமையாக செயல்பட்ட ரயில்வே போலீசாரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். அதைதொடர்ந்து மீட்கப்பட்ட தங்க நகைகள், செல்போன் மற்றும் பணத்தை உரியவர்களிடம் டிஜிபி சைலேந்திரபாபு ஒப்படைத்தார். அவர் பேசியதாவது: தமிழகத்தில் கடந்த ஓராண்டில் பல்வேறு குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. குறிப்பாக தென் மாநில ரயில்களில், வட இந்திய திருடர்கள், ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த ஒரு வருடங்களில் இது போன்ற குற்றங்கள் நடைபெறவில்லை. ரயில் திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்து, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்க காரணமாக இருந்த போலீசாருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்என்றார்.

அதை தொடர்ந்து பேசிய ரயில்வே பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. சந்தோஷ் என்.சந்திரன், மின்சார ரயில்களில் பயணிகளுக்கு திருநங்கைகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடும் திருநங்கைகளை கைது செய்து நீதிமன்ற மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதுபோன்று தொடர்  சம்பவங்களில் ஈடுபடும் திருநங்கைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கூறினார்.




Tags : Tamil Nadu ,DGP Silenthrababu , By the excellent action of the police Crime in Tamil Nadu has come down in the last one year: DGP Silenthrababu Babu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...