×

1000 ஆதிதிராவிடர், பழங்குடியினத்தவருக்கு விவசாய மின் இணைப்பு பெற 90% மானியம் தூய்மை பணியாளர்களுக்கு வீடு வாங்க மானியம்

* தமிழ்நாடு சிமெண்ட் கழக விற்பனை நிலையம் அமைக்க 90 லட்சம் மானியம் வழங்கப்படும்
* புதிதாக 7 கல்லூரி மாணவர் விடுதிகள் தொடங்கப்படும் n அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு

தமிழக சட்டப் பேரவையில் நேற்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த பின்பு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பேசியதாவது:  இந்த நிதியாண்டில் 1000 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற 90 சதவீதம் மானியம் ₹23 கோடியே 37 லட்சம் செலவில் வழங்கப்படும். வீடற்ற 500 தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ₹55 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடுகள் வாங்கிட ₹42 கோடியே 50 லட்சம் மானியம் வழங்கப்படும். 10 ஆயிரம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளநிலை மற்றும் முதுநிலைப் பட்ட மாணாக்கருக்கு வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளத் தேவையான பயிற்சிகள் ₹10 கோடி செலவில் வழங்கப்படும். 2 ஆயிரம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ₹2 கோடியே 50 லட்சம் செலவில் மதிப்புக் கூட்டப்பட்ட தொழில் திட்டங்கள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படும்.

200 நிலமற்ற ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் வகையில், அவர்கள் விவசாய நிலம் வாங்க, நிலத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ₹5லட்சம் வரை என மொத்தம் ₹10 கோடி செலவில் மானியம் வழங்கப்படும். பழுதடைந்துள்ள 10 ஆதி திராவிடர் பள்ளி மாணாக்கர் விடுதிகளுக்கு ₹45 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் புதிய விடுதிக் கட்டிடங்கள் கட்டப்படும்.   வாடகைக் கட்டிடங்கள், பழுதடைந்த கட்டிடங்களில் இயங்கி வரும் 5 ஆதி திராவிட மாணாக்கர் கல்லூரி விடுதிகளுக்கு ₹28 கோடியே 35 லட்சம் செலவில் புதிய விடுதிக் கட்டிடங்கள் கட்டப்படும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 6 மேல்நிலைப் பள்ளிகள் ₹16 கோடியே 26 லட்சம் செலவில் மாதிரிப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.   11 மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் குடியிருப்புகளில் ₹17 கோடி மதிப்பீட்டில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். 83 ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதிகளுக்கு ₹10 கோடியே 58 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டப்படும். 500 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ₹7 கோடியே 50 லட்சத்தில் கறவை மாடுகள் வாங்க ₹2 கோடியே 25 லட்சம் மானியம் வழங்கப்படும்.

  100 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராக ₹3 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ₹90 லட்சம் மானியம் வழங்கப்படும். 50 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு ₹1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் ஆவின் பாலகம் அமைக்க ₹45 லட்சம் மானியம் வழங்கப்படும்.   ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ₹40 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். 1,000 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தீவனப்புல் வளர்க்க விதைத் தொகுப்பு மற்றும் புல் கறணைகள் ₹1 கோடி செலவில் வழங்கப்படும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் ஆண்டு வருமான உச்சவரம்பு ₹3 லட்சமாக உயர்த்தப்படும்.

126 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களுக்கு ₹3 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வு உபகரணங்கள் வழங்கப்படும். 7 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்லூரி மாணாக்கர் விடுதிகள் ₹3 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தொடங்கப்படும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்காக தொழில்நுட்ப - பொருளாதார ஆய்வு மூலம் ₹1 கோடி செலவில் திட்ட அறிக்கை வங்கி ஏற்படுத்தப்படும். 7 மாவட்டங்களில் உள்ள 88 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு ₹9 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் வைப்பறையுடன் கூடிய புதிய சமையலறைகள் கட்டப்படும். இவ்வாறு அவர் பேசினார்.



Tags : 90% subsidy for 1000 Adithravidars and tribals to get agricultural electricity connection Subsidy to buy house for cleaning staff
× RELATED ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண்...