புதுச்சேரி ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு: ரவுடிகளிடம் தனிப்படை தீவிர விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரி காராமணிக்குப்பம் அருகே நேற்றிரவு ரயில் தண்டவாளத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக ரவுடிகளை பிடித்து தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். புதுச்சேரி முதலியார்பேட்டை சிமெண்ட் ரோடு அருகில் ரயில் தண்டவாளம் உள்ளது. நேற்றிரவு காராமணிக்குப்பத்தை ஒட்டியுள்ள இந்த தண்டவாள பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். பின்னர் இதுகுறித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது தண்டவாளத்தில் வெடிகுண்டு வெடித்தது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் மர்ம நபர் ஒருவர் தண்டவாளத்தில் இருந்து தப்பி ஓடினார். அவரை போலீசார் விரட்டி சென்றனர். ஆனால் அவர் தப்பி ஓடி தலைமறைவானார். இதனிடையே வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அவர்கள் தண்டவாளத்தின் கிழக்கு பகுதியில் அங்குலம் அங்குலமாக ஆய்வு மேற்கொண்டதில் ெவடிக்காத வெடிகுண்டு இருந்தது தெரியவந்தது. இதை கைப்பற்றி, அது என்ன வகையான வெடிகுண்டு என ஆய்வு செய்து வருகின்றனர்.

வெடிகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் புதுச்சேரி - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் அப்பகுதியை கடந்து சென்றது. இதனால் ரயிலை கவிழ்க்க தீவிரவாதிகள் சதி செய்தனரா? என விசாரணை நடத்தப்பட்டது. மேலும் ஏற்கனவே இதேபோல் ரவுடிகள் அப்பகுதியில் வெடிகுண்டுவீசி கொல்லப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ரவுடிகள் யாரையாவது கொல்ல சதி திட்டம் போட்டு வெடிகுண்டு வீசப்பட்டதா? என்பது தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வாணரப்பேட்டை, முதலியார்பேட்டை மற்றும் அனிதா நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ரவுடிகள் சிலரை சந்தேகத்தின்பேரில் தனிப்படை போலீசார் பிடித்து காவல்நிலையம் அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: