×

கத்திரி வெயில் தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் இன்று தொடங்கியுள்ளது. பகல் நேரத்தில் அதிக அளவில் வெயில் மற்றும் வெப்பம் இருக்கும் என்பதால் காலை 11 மணியில் இருந்து மதியம் 3 மணி வரையில் பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மே 4ம் தேதி தொடங்கி 25 நாட்களுக்கு கத்திரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் நிகழும். இந்த காலத்தில் வெயிலின்  தாக்கம் அதிக அளவில் இருக்கும். குறிப்பாக 113 டிகிரி வரையில் செல்லவும் வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் இ யல்பாக இருக்க வேண்டிய வெயிலின் அளவு இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  பசிபிக் பெருங்கடல் பகுதியில் நிலவும் வெப்பத்தின் காரணமாக வெப்ப
காற்று பூமியின் மையப்பகுதியில் பரவியுள்ளதால்,  இந்தியா முழுவதும் வெப்ப அலை வீசி வருகிறது.  அதனால் இந்த ஆண்டு அதிக வெயில் மற்றும் வெப்பம் இருக்க வாய்ப்புள்ளது. இதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் வடக்கு ஒடிசா, கர்நாடகாவின் கடலோரப் பகுதி, ஹரியானா, சண்டிகர், விதர்பா, மத்திய பிரதேசம், உத்தரகண்ட், கேரளா, மாகே, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட மாநிலங்களில் 1.6 டிகிரி செல்சியஸ் முதல் 3.0 டிகிரி செல்சியஸ் வரை இயல்பைவிட நேற்று கூடுதலாக வெயில் நிலவியது. பஞ்சாப், ராஜஸ்தான், மாநிலங்்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் கூடுதலாக இருந்தது.

அதே நேரத்தில் தமிழகத்தில் கடலோரப் பகுதியில் கடல் காற்றின் காரணமாக நேற்று சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது. மதுரை, வேலூர், சென்னை, தஞ்சாவூர், திருத்தணி, ஆகிய பகுதிகளில் 108 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. பிற மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரியில் இருந்து 106 டிகிரி வரை  வெயில் நிலவியது. அதாவது இயல்பைவிட கூடுதலாக 3 டிகிரி செல்சியஸ் கூடுதலாக இருந்தது. குறிப்பாக சென்னையில் 90 டிகிரி, தாம்பரம் 94 டிகிரி, காஞ்சிபுரம் 100 டிகிரி, ஆரணி 99 டிகிரி, திருவண்ணாமலை 100 டிகிரி,திருச்சி 102 டிகிரி, வெயில் நிலவியது.

இதே நிலை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கும்.அதனால் வரும் நாட்களில் வெயில் அதிகம்  இருக்கும் என்பதால், காலை 11 மணி முதல் மதியம் 3 வரையில் பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அதனால் முதியவர்கள், குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே தமிழகத்தில் ஏ ற்பட்டுள்ள வெப்ப சலனம் காரணமாக சத்திய மங்கலம் பகுதியில் 50 மிமீ, ஏலகிரி, பவானிசாகர், சேலம் 40 மிமீ, தளி, பென்னாகரம், கூடலூர் 30 மிமீ மழை பெய்துள்ளது. இதையடுத்து, தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 6ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும் நகரின் சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

இந்நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. அதன் காரணமாக நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது வட மேற்கு திசையில் நகர்ந்து அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதனால் அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 60 கிமீ வேகத்தில் காற்று வீசும். 6ம் தேதியும் அதே நிலை நீடிக்கும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Tags : Weil , Scissors Weil Launched: Meteorological Center Information
× RELATED தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெயில் சதம்: வானிலை ஆய்வு மையம் தகவல்