×

2009ல் மது வாங்க ரூ.50 கொடுக்காத மனைவி கொலை கணவருக்கு விதித்த ஆயுள் உறுதி: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: குவாட்டர் மது வாங்க ரூ.50 கொடுக்காத மனைவியை கொலை செய்த கணவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதிசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம், முருகன்பதி கிராமத்தை சேர்ந்த முத்துசாமி குடிப்பழக்கத்தின் காரணமாக தனது மனைவி தெய்வானையிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும், மனைவியின் நடத்தை குறித்தும் சந்தேகப்பட்டுள்ளார். இந்நிலையில் 2009 ஆகஸ்ட் 3ம் தேதி ஒத்தக்கல் மண்டபம் ஆற்றங்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்த மனைவியிடம் குடிப்பதற்கு 50 ரூபாய் கேட்டுள்ளார்.

தர மறுத்த மனைவி தெய்வானையை நெஞ்சு மற்றும் வயிற்று பகுதியில் 6 முறை கத்தியால் குத்திக் கொன்றார். பின்னர் தனக்குத்தானே வயிற்றில் குத்தி தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக முத்துசாமி மீது கிணத்துக்கடவு காவல் நிலையத்தினர் கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் முத்துசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் 2010ல் தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முத்துசாமி மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வக்கீல்களின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனைவியை ஆறு முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள நிலையில், உள்நோக்கம் இல்லாமல் வேகத்தில் செய்த கொலை என கூறுவதை ஏற்கமுடியாது. குடிப்பழக்கம் காரணமாக தாயுடன் அடிக்கடி தகராறில் ஈடுபடுவார் என்று சொந்த பிள்ளைகளே சாட்சியம் அளித்துள்ளனர். எனவே, முத்துசாமிக்கு கோவை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதிசெய்கிறோம். அவரது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.

Tags : ICC , Life sentence imposed on husband for murder of wife who did not pay Rs 50 to buy alcohol in 2009: ICC verdict
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...