காஞ்சிபுரத்தில் ரூ.218 கோடியில் கட்டப்படும்; அரசு புற்றுநோய் மருத்துவமனை பணிகள் விரைவில் முடியும்: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

சென்னை: காஞ்சிபுரத்தில் ரூ.218 கோடியில் கட்டப்படும் அரசு புற்றுநோய் மருத்துவமனை பணிகள் விரைவில் முடிவடையும் என அமைச்சர்.எ.வ.வேலு கூறினார்.

காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் கட்டப்படும் அரசு புற்றுநோய் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர், கூறியதாவது. பேரறிஞர் அண்ணா நினைவாக காஞ்சிபுரத்தில் அரசு புற்றுநோய் மருத்துவமனை செயல்படுகிறது. வெளிமாநில, வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் இங்கு வந்து, சிகிச்சை பெற்று குணமடைந்து செல்கின்றனர்.

இடப்பற்றாக்குறை காரணமாக இந்த மருத்துவமனை அருகிலேயே ரூ.118 கோடியில் புதிதாக புற்றுநோய் மருத்துவமனை தரைத் தளத்துடன் கூடிய 2 மாடிகள் தரமான முறையில் கட்டப்பட்டு பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. 3.5 லட்சம் சதுரடி பரப்பளவில் கட்டுவதற்கு கடந்த 7.7.2020 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கு 500 படுக்கை வசதிகள் அமையவுள்ளன. புற்றுநோய் பரவல் அதிகரித்துக் கொண்டே போவதால், முன்கூட்டியே தயார் நிலையில் இருப்பதற்காக தற்போது கட்டப்படும் மருத்துவமனையின் மேல் பகுதியில், மேலும் 2 மாடிக் கட்டிடம் கட்ட முடிவு செய்து, அதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு விட்டது. அந்தப்பணிகளும் விரைவில் தொடங்கப்படும்.

மேலும், அமைய இருக்கும் 2 மாடிக் கட்டிடத்தில் 250 படுக்கைகள் உள்பட மொத்தம் 5 மாடிக் கட்டிடத்திலும் சேர்த்து 750 படுக்கை வசதிகள் உடையதாக கட்டப்படுகிறது. தமிழகத்திலேயே இதுவரை இல்லாத வகையில், புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் அதிநவீன கருவிகள், உணவுக்கூடம், சலவைக்கூடம், வாகனங்கள் நிறுத்தும் வசதி ஆகியனவும் இந்த மருத்துவமனையில் அமைகிறது. இந்த கட்டிடம் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

அவருடன், கலெக்டர் ஆர்த்தி, எம்பி செல்வம், க.சுந்தர் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் சிவ.ருத்ரய்யா, மேயர் மகாலட்சுமி, புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் வி.சீனிவாசன், நிலைய மருத்துவ அலுவலர் எஸ்.மனோகரன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் விஸ்வநாதன், கண்காணிப்பு பொறியாளர் ராஜசேகர், செயற்பொறியாளர் கார்த்திகேயன் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: