×

திராவிட மாடல் என்று சொன்னால் சிலருக்கு எரிச்சல், ஆத்திரம் வரும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டின் மனிதநேயம் நாடு முழுமைக்கும் ஒரு மாடலாக உருவாகியிருக்கிறது. இதுவும் ஒருவகை திராவிட மாடல்தான். இதைச் சொன்னால் பலருக்கு எரிச்சல் வரும், ஆத்திரம் வரும், கோபம் வரும். அதற்கெல்லாம் நாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரமலான் பெருநாள் விழாவை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்  நிகழ்ச்சி நேற்று மாலை பல்லவன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது.

இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 1600 இஸ்லாமியர்களுக்கு புத்தாடை, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். மேலும் இஸ்லாமியருக்கு அரிசி பருப்பு, புத்தாடை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவித்தொகை, 10 பெண்களுக்கு தையல் மெஷின் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்பி கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றியழகன், பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டின் மனிதநேயம் இன்றைக்கு நாடு முழுமைக்கும் ஒரு மாடலாக உருவாகியிருக்கிறது. இதுவும் ஒருவகை திராவிட மாடல்தான். இதைச் சொன்னால் பலருக்கு எரிச்சல் வரும், ஆத்திரம் வரும், கோபம் வரும். அதற்கெல்லாம் நாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. சிறுபான்மை மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை முடக்கியது அதிமுக ஆட்சி. ஆனால் அந்த மக்களுக்கு அந்த கழகத்தை மீண்டும் பொலிவோடு செயல்பட வைத்தது, சிறுபான்மை மக்களுக்கு பெரும் நலத்திட்ட உதவிகளை தொழில் தொடங்க நிதி உதவிகள் கிடைக்க வைத்து, அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டு வந்த ஆட்சிதான் திமுக ஆட்சி.

இவ்வாறு எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் சரி, ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் சரி, சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுத்து வருவது தான் உங்கள் வீட்டுப் பிள்ளையான திமுக. திமுக உங்கள் வீட்டுப் பிள்ளை என்றால், அதில் நானும் உங்களில் ஒருவன்.  இதுபோன்ற நலத்திட்டங்களை உதவிகளை, அதுவும் ரமலான் விழாவினை 2016ல் இருந்து தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். நான் எப்போதும் உங்களோடு இருக்கக்கூடியவன். நீங்களும் எப்போதும் என்னோடு இருக்கக் கூடியவர்கள். அதுதான் திமுகவிற்கும் - சிறுபான்மைச் சமுதாயத்திற்கும் இடையே இருக்கும் ஒரு நல்லுறவு - நம்பிக்கை உறவு என்று கூறி, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கும் அத்தனை பேருக்கும் என்னுடைய ரமலான் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்து, மீண்டும் மீண்டும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags : dravidi ,K. Stalin , Some people get irritated and angry when they are told that it is a Dravidian model: MK Stalin
× RELATED 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி...