தேரில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலி; காயமடைந்தவர்களுக்கு 25 டாக்டர்கள் தீவிர சிகிச்சை

தஞ்சை: தஞ்சை அருகே மின்சாரம் தாக்கியதில் காயமடைந்தவர்களுக்கு 25 டாக்டர்கள் கொண்ட குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்கினார். தஞ்சை மாவட்டம் களிமேடு கிராமத்தில் அப்பர் என்ற திருநாவுக்கரசு சுவாமிகளின் மடத்தில் 94வது ஆண்டு அப்பர் சதயவிழாவில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு மேல் தேர் புறப்பாடு நடந்தது. நேற்று அதிகாலை 3.10 மணி அளவில் கீழத்தெரு பகுதிக்கு தேர் சென்றது. அந்த தெருவில் உள்ளவர்கள் தேங்காய் உடைத்து வழிபட்டவுடன் தேரை மீண்டும் மடத்திற்கு கொண்டு செல்ல திருப்பியபோது, யாரும் எதிர்பாராத வகையில் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் தேரின் அலங்கார தட்டி உரசியது.

இதன் காரணமாக தேர் மீது மின்சாரம் பாய்ந்து தேர் தீப்பிடித்து எரிந்தது. இதில் தேரில் அமர்ந்து இருந்த பூசாரி உள்பட சிறுவர்களும், தேரை சுற்றி நின்றவர்களும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் மோகன் (22), பிரபாத்(47), ராகவன்(24), அன்பழகன்(60), செல்வம்(56) உள்ளிட்ட 11 பேர் இறந்தனர்.  17 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். இந்நிலையில் பிரேதபரிசோதனைக்கு பின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் களிமேடு கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு 2 சிறுவர்களின் உடல்கள் அடக்கமும், 9 பேரின் உடல்கள் தகனமும் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் களிமேடு கிராமமே சோகத்தில் மூழ்கியது.

முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பலியான ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்று, பலியானவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.5 லட்சத்திற்கான நிவாரணம் வழங்கினார்.அதேபோல்  11 பேரின் குடும்பத்தினரை சசிகலா நேற்றிரவு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் 11 பேரின் குடும்பத்தினருக்கும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த 17 பேருக்கு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு 25 டாக்டர்கள் கொண்ட குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று மருத்துவக்கல்லூரி முதல்வர் ரவிக்குமார் கூறினார்.

Related Stories: