×

கலைப்பண்பாட்டு துறை சார்பில் 17 முதல் 35 வயது வரையிலான இளைஞர்களுக்கு கலைப் போட்டிகள்: கலெக்டர் அறிவிப்பு

திருவள்ளூர்: கலைப்போட்டிகள் அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் 17 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய பிரிவுகளில் மாவட்ட, மாநில அளவிலான நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. குரலிசை போட்டி, நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டுவாத்தியம், மாண்டலின், கிதார், ஹார்மோனியம், கீபோர்ட் சாக்சபோன், கிளாரினெட் போன்ற கருவி இசையில் வர்ணங்கள் தமிழ்பாடல்கள் இசைக்கும் தரத்தில் உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம். தாளக்கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளை சேர்ந்தோர் சில தாளங்களில் வாசிக்கின்ற தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும். பரதநாட்டியத்தில் வர்ணம் மற்றும் தமிழ் பாடல்கள் நிகழ்த்தும் நிலையில் உள்ளவர்கள் பங்கேற்கலாம். கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், கைச்சிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம், மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும். போட்டியில் குழுவாக பங்கேற்க அனுமதியில்லை. தனிநபராக அதிகபட்சம் 5 நிமிடம் மட்டும் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுவர்.

ஓவியப்போட்டியில் பங்கேற்போருக்கு ஓவியத் தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்துவதால் பங்கேற்போர் கொண்டு வரவேண்டும். நடுவர்கள் அளிக்கும் தலைப்பில் ஓவியங்கள் வரைய வேண்டும். அதிகபட்சம் 3 மணி நேரம் அனுமதிக்கப்படுவர். மாவட்ட போட்டியில் முதலிடம் பெறுவோர் மாநில அளவிலான போட்டிக்கு அனுமதிக்கப்படுவர். போட்டிகளில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் மே 10ம் தேதிக்குள் மண்டல உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம் - 631 502 என்ற முகவரிக்கு தங்களது பெயர், பிறந்த நாள், முகவரி, செல்போன் எண், பங்கேற்க விரும்பும் கலைப் பிரிவு ஆகிய விவரங்களை அனுப்பலாம். இது தொடர்பாக 91 5008 5001 என்ற எண்ணில் அனுப்பலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Department of Arts and Culture , Art competitions,Department of Arts and Culture, Collector Announcement
× RELATED கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு விருதுகள்: கலெக்டர் வழங்கினார்