×

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியதால் பீர் விற்பனை 2 மடங்காக அதிகரிப்பு

*ஹாட் டிரிங்க்ஸ் விற்பனை குறைந்தது

வேலூர் : வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் சுட்டெரிக்கும் வெயிலால் பீர் விற்பனை 2 மடங்காக அதிகரித்துள்ளது. மேலும் ஹாட் டிரிங்க்ஸ் விற்பனை குறைந்திருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.  வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. கடந்த வாரம் அதிகபட்சமாக 103 டிகிரி வெயில் பதிவானது.

வெயிலின் அனல் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நீர்ச்சத்து உள்ள குளிர்பான கடைகளை மக்கள் நாடி செல்கின்றனர். இதனால் குளிர்பான கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் குளிர் பானங்கள், தர்பூசணி, முலாம்பழம் உள்ளிட்ட பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

அதேபோல் வெயிலால் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை 2 மடங்காக அதிகரித்துள்ளது. மேலும் பிராந்தி, ரம் போன்ற ஹாட் டிரிங்க்ஸ் விற்பனை சரிந்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் டாஸ்மாக் மாவட்டத்துக்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் 117 மதுபான கடைகளும், ராணிப்பேட்டை டாஸ்மாக் மாவட்டத்தில் 88 கடைகளும் உள்ளன.

இந்த கடைகளில் வழக்கமாக பிராந்தி, ரம் உள்ளிட்ட ஹாட் டிரிங்க்ஸ் விற்பனையே அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், குடிமகன்கள் குளிர்ந்த பீர் குடிப்பதையே விரும்புகின்றனர். வேலூர், ராணிப்பேட்டை டாஸ்மாக் மாவட்டங்களில் கடந்த வாரம் வரை தினமும் 1,200 பெட்டிகள் பீர் விற்பனையானது.

ஹாட் மதுபானங்கள் 700 பெட்டிகள் விற்பனையானது. இந்நிலையில் வெயில் அதிகரித்துள்ளதால் தினமும் 2,600 பெட்டிகள் வரை பீர் விற்பனையாகிறது. அதேநேரத்தில் ஹாட் டிரிங்க்ஸ் விற்பனை 400 பெட்டிகளாக குறைந்துள்ளது’ என்றனர்.

Tags : Velur ,Tirupathur ,Ranipadu , Vellore, Beer, Summer, Beer ssales Increased
× RELATED திருப்பத்தூரில் சுட்டெரிக்கும்...