×

இயற்கை வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி உத்தரப்பிரதேச பல்கலை மாணவர் நாடு முழுவதும் சைக்கிள் பிரசாரம்

ராமேஸ்வரம் : இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு செய்து வரும் உ.பி மாணவர் ராமேஸ்வரத்தில் நேற்று பிரசாரம் செய்தார். உத்தரப்பிரதேச மாநிலம் காஜிபூர் மாவட்டம் ஜமானியா பகுதியை சேர்ந்தவர் பிரதீப்குமார் (20). இவர் அங்குள்ள புராஞ்சல் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு நவ. 3ம் தேதி காஜிபூர் மாவட்டத்தில் சைக்கிள் பயணத்தை துவக்கிய இவர் பீகார், நேபாளம், காஷ்மீர், ஜார்கண்ட், மேற்குவங்கம், வங்கதேசம், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி வழியாக தமிழகத்திற்கு வந்தார்.

 இங்கு சென்னை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சை, திருச்சி, மதுரை சென்று ராமநாதபுரம் வழியாக நேற்று முன்தினம் ராமேஸ்வரம் வந்தார். ராமேஸ்வரத்தில் தனுஷ்கோடி, பாம்பன், குந்துகால், அப்துல்கலாம் நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள், மீனவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.

பாலித்தீன், பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இரண்டு நாட்கள் ராமேஸ்வரம் தீவுப்பகுதி முழுவதும் சைக்கிளில் சென்று பிரசாரம் செய்த பிரதீப்குமார் நேற்று காலை கன்னியாகுமரி புறப்பட்டு சென்றார்.

ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் நாசர்கான், துணைத்தலைவர் தெட்சிணாமூர்த்தி, பஜ்ரங்தாஸ்பாபா அன்னசத்திரம் நிர்வாகி சீதாராம்தாஸ்பாபா, அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை நிர்வாகி ஷேக்சலீம் ஆகியோர் பங்கேற்று பிரதீப்குமாரை பாராட்டி வழியனுப்பி வைத்தனர்.

Tags : Utar Pradesh University , Uttarpradesh, Cycle Ride,nature,
× RELATED குறைந்த கட்டணத்தில் இன்று முதல்...