×

தமிழகத்துக்கு தினசரி 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி வழங்க உத்தரவிட வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழகத்தில் தடையில்லா மின் விநியோகத்தை பராமரிக்க, தினசரி 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்க நிலக்கரி அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:
ஒடிசாவில் உள்ள தல்சர் சுரங்கங்களில் இருந்து போதுமான நிலக்கரி தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், தற்போது தினசரி நிலக்கரி வரத்து 50,000 மெட்ரிக் டன்கள் அளவிற்கு மட்டுமே
உள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கோடைக்கால மின் தேவையை பூர்த்தி செய்திட நிலக்கரி உற்பத்தி போதுமானதாக இருந்தாலும், ரயில்களில் ரேக்குகளின் பற்றாக்குறை காரணமாக, அது துறைமுகங்களுக்கு கொண்டு செல்லப்படுவதில்லை என்று எனக்கு தெரிய வந்துள்ளது.

இதன் விளைவாக, தமிழகத்தில் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு கவலை கொள்ளத்தக்க அளவிற்கு எட்டியுள்ளது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை பொறுத்தவரை, பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களுக்கு நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரியை எடுத்துச் செல்ல 22 ரயில்வே ரேக்குகள் தேவைப்படுகின்றன. இருப்பினும், ஒரு நாளைக்கு சராசரியாக 14 ரேக்குகள் மட்டுமே தற்போது ரயில்வேயால் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், உள்நாட்டு நிலக்கரி பற்றாக்குறை காரணமாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தடையற்ற மின் விநியோகத்தை பராமரிப்பதற்காக, அதிக விலை கொடுத்து நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இது கோவிட் பெருந்தொற்றிற்கு பிந்தைய பொருளாதாரத்தை கணிசமாக பாதிக்கும். இந்த நிலை உடனடியாக கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இந்த இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களில், எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி, நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். இந்த நடவடிக்கையால் மட்டுமே தமிழ்நாட்டில் தடையில்லா மின் விநியோகத்தை பராமரிக்க முடியும். இந்த விஷயத்தில் இந்திய பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,MK Stalin ,Modi , Tamil Nadu, metric tons, coal, Prime Minister Modi, Chief Minister MK Stalin
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...