×

தமிழகத்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். உயிர் மேல் அக்கறை இருந்தால் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சைதாப்பேட்டை மாநகர போக்குவரத்து கழக பணிமனையில் புதிதாக கட்டப்பட்ட தொழிலாளர் ஓய்வு அறையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

விழாவில் அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:
நிதி நெருக்கடியான சூழலில் ஓய்வு அறையை அமைச்சர் கட்டி கொடுத்துள்ளார். திமுக அரசு பெண்களுக்கு இலவச பயணம் அறிவித்து மாபெரும் புரட்சியை செய்துள்ளது. மேலும் பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயணம் அவர்கள் தங்களது சொந்த காலில் நிற்க வழி வகுத்துள்ளது. பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் அறிவித்த நாள் முதல் தற்போது வரை பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்வது 40 சதவீதத்தில் இருந்து 61 சதவீதமாக உயர்ந்துள்ளது. பள்ளி மாணவர்கள் போதிய பேருந்து இல்லாததால் தான் படியில் தொங்கியபடி செல்வதாக கூறுகின்றனர். கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருவதாகவும், இந்தியாவில் டெல்லி, உத்தரபிரதேசம், மராட்டியம், கேரளா போன்ற மாநிலங்களில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும் அந்த மாநிலங்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்படியும் ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தை பொறுத்தவரையில் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். உயிர் மேல் அக்கறை இருந்தால் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். இது என்னுடைய வேண்டுகோள்.

தமிழகத்தை பொறுத்தவரை பதற்றமான சூழ்நிலை இல்லை என்றாலும் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். கடந்த ஒரு மாதமாக பூஜ்ஜியம் என்ற அளவில் தமிழகத்தில் இறப்பு சதவீதம் உள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தில் உயிர் இழப்பை தவிர்ப்பது தான் முக்கியம். அருகில் அரசு மருத்துவமனை இருந்தும் அதை தவிர்த்து தொலைவில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் அந்த மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

* டெல்லி, உ.பி., மராட்டியம், கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வருவதால், அந்த மாநிலங்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்படி ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
* தமிழகத்தை பொறுத்தவரை பதற்றமான சூழ்நிலை இல்லை என்றாலும் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

Tags : Tamil Nadu ,Minister ,Ma Subramanian , Public, Mask, Minister Ma. Subramanian,
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...