காஞ்சிபுரம்: மனிதர்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கிடுபவர் சித்திரகுப்தரே. இந்த சித்திரகுப்தருக்கென தென்னிந்தியாவில் காஞ்சிபுரத்தில் மட்டுமே தனிக்கோயில் அமைந்துள்ளது.காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே நெல்லுகாரத்தெரு பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயிலில், சித்திரகுப்தர் அவதரித்த தினமாகக் கருதப்படும் சித்ரா பவுர்ணமி தினமான நேற்று காலை சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டு சித்திரகுப்தர் மற்றும் அவரது தேவியான கர்ணகி என்கிற சித்திரலேகாவுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.அதனைதொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க, வைர ஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இவ்விழா நடைபெறாததால் ஏமாற்றமடைந்த பக்தர்கள் இவ்வாண்டு அதிகாலை முதலே நீண்ட வரிசையில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் பரிகாரத்திற்காக எள்ளின் மேல் 7 நெய்விளக்கு ஏற்றி சிறப்பு அர்ச்சனை செய்து வருகின்றனர்.
இவ்விழாவினை ஒட்டி இந்து சமய அறநிலையத்துறையினரால் பொது தரிசனம்,சிறப்பு தரிசனம் என இருவகைபடுத்தப்பட்டு தனிதனியே வரிசைபடுத்தப்படுத்தப்பட்டதில் ஆயிரகணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இவ்விழாவையொட்டி அப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டு 50க்கும் மேற்பட்ட போலீசார்,ஊர் காவல்படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து நேற்று இரவு சித்திர குப்தருக்கு கர்ணகி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சித்ரா பவுர்ணமி விழா நேற்று நடைபெற்றது.
சித்திரை பவுர்ணமியான நேற்று காலை மங்கள இசையுடன் விழா தொடங்கியது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தனி அறையில் இருந்த தவயோகி ரகோத்தம சுவாமிகளின் தனி அறை திறக்கப்பட்ட உடன் தரிசனம் செய்தனர். ரகோத்தம சுவாமிகள் பிருந்தாவனத்தில் உள்ள விநாயகர், ராகவேந்திரர், சத்யநாராயணா,ஆஞ்சநேயர் தியான லிங்கம்,நந்திகேஸ்வரருக்கு பூஜை செய்து சிறப்பு ஆராதனை வழிபாடு நடத்தினார். அதன் பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் காஞ்சிபுரம்,சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.