×

கவர்னர் தேநீர் விருந்தை புறக்கணித்ததால் டீ செலவு மிச்சம் என்று கூறிய அண்ணாமலைக்கு குவியும் கண்டன குரல்கள்: டீக்கான பில் வரும் வரை காத்திருப்போம்-நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி

சென்னை: கவர்னர் தேநீர் விருந்தை புறக்கணித்ததால் டீ செலவு மிச்சம் என்று கருத்து தெரிவித்த பாஜ தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் கண்டனங்கள்பதிவாகி வருகிறது.குறிப்பாக, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், விசிக எம்எல்ஏ ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ் புத்தாண்டையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த விருந்தில், ‘நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு  விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டசபையில் மசோதா நிறைவேற்றி அனுப்பியதை. கவர்னர் குடியரசு தலைவருக்கு அனுப்பாததை கண்டித்தும், சட்டமன்றத்தின் மாண்பை கவர்னர் குறைப்பதாகவும் கூறி இந்த விருந்தை புறக்கணிக்க போவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழக அரசு சார்பில் கவர்னர் அளித்த தேநீர் விருந்து புறக்கணிக்கப்பட்டது. திமுக மற்றும் அதன் கூட்டணி  கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, மமக,  கொமதேக, தவாக உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் எம்பி, எம்எல்ஏக்கள்  யாரும் பங்கேற்கவில்லை. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி,  வேலுமணி, சி.விஜயபாஸ்கர், தளவாய்சுந்தரம், பாமக எம்எல்ஏக்கள் சதாசிவம்,  வெங்கடேஸ்வரன் பங்கேற்றனர். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, ஒன்றிய அமைச்சர்  முருகன், குஷ்பு, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டவர்கள் மட்டுமே  பங்கேற்றனர். தமிழக அரசே இந்த தேநீர் விருந்தை புறக்கணித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தற்பொழுது வரை 11 சட்ட மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அதில் நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதா-2022, பாரதியார் பல்கலைக்கழகத்திற்குக் கீழ் வரும் சுயநிதி கல்லூரிகளில் இருந்து 5 உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான சட்டத்திருத்த மசோதா-2021, தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களுக்கான சட்டத்திருத்த மசோதா. இந்த மூன்று மசோதாக்களும் திமுக ஆட்சியில் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளவை. இதுதவிர மேலும் 8 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கே ஒப்புதல் வழங்காத கவர்னர் விருந்தில் அதிமுகவினர் பங்கேற்றதற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தேநீர் விருந்து புறக்கணிப்பு குறித்து பாஜ தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்தில், ‘‘ஆளுநர் தேநீர் விருந்தை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்ததால், டீ செலவு மிச்சம். அனைத்தும் மக்களின் வரிப்பணம் தான். மக்களின் வரிப்பணம் மிச்சமாகி இருக்கிறது’’ என்று கூறியிருந்தார். அண்ணாமலையில் பேச்சுக்கு பல்வேறு கட்சியினர், நடுநிலையாளர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இது குறித்து விசிக எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ் அளித்த பேட்டியில், ‘பெட்ரோல், டீசல் விற்கும் விலையில் ஆளுநர் மாளிகைக்கு சென்று வர ஆகும் டீசல் செலவு மிச்சம் என எங்களாலும் சொல்ல முடியும்’’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.  

ஆளூர் ஷா நவாஸ் தெரிவித்த கருத்தை டேக் செய்து, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது டிவிட்டரில், ‘‘இந்த தேநீர் விருந்து யாருடைய தனிப்பட்ட நிதியிலிருந்தும் வழங்கப்படுவதில்லை. தமிழ் மக்களின் பணம் செலவிடப்படுகிறது. சொன்னது போல் சேமிப்பு இருந்ததா; இல்லையா என்பதை அறிய, பில் (கோப்பு) வரும் வரை காத்திருப்போம்’’ என்று தெரிவித்திருந்தார். அதாவது, இந்த தேநீர் விருந்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு பாஜவினர் தான் அதிக அளவில் கலந்து கொண்டனர். இதனால், செலவு தான் அதிகமாகியிருக்கும். எவ்வளவு செலவு ஏற்பட்டது என்ற பில் விவரம்  தமிழக அரசின் நிதித்துறைக்கு தான் வரும். அதனை நிதித்துறை தான் பரிசீலித்து அதற்காக பணத்தை வழங்கும். அப்போது செலவு அதிகமாகியிருக்கிறதா அல்லது செலவு மிச்சமாகியிருக்கிறதா என்பது அவரின் கருத்தாக உள்ளது. பில் அனுப்பும்போது செலவு விவரம் முழுமையாக தெரிந்து விடும்.

அதே நேரத்தில் சமூக வலைத்தளங்களிலும் பாஜ தலைவர் அண்ணாமலை கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு பதிவுகள் வந்து கொண்டிருக்கிறது. அந்த பதிவில் ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு. ஆளுநர் மாளிகையின் மொத்த பரப்பளவு 157 ஏக்கர். 600க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்கிறார்கள். ஆளுநரின் ஆண்டு ஊதியம் 45 லட்சம், ஆளுநர் செலவினங்களுக்காக ஆண்டுக்கு ரூ.1.66 கோடி ஒதுக்கப்படுகிறது. பர்னீச்சர் பொருட்கள் வாங்குவதற்கு ஆண்டுக்கு ரூ.7.5 லட்சம் வரை ஒதுக்கப்படுகிறது. இத்தனை கோடி ரூபாய் செலவு செய்தும், செயல்படாமல் இருப்பதற்கு ஆளுநர் எதற்கு என்ற வறுத்தெடுத்து வருகின்றனர். தேவையில்லாமல் அண்ணாமலை வாயை விட்டு, சும்மா இருந்த சங்கை ஊதி, பிரச்னையை கிளப்பி விட்டு விட்டாரே என்று அவரது கட்சியினரே பேச ஆரம்பித்துள்ளனர்.

Tags : Anamalai ,Palanivel Diagarajan , Governor tea party, tea cost savings, Annamalai, Finance Minister Palanivel Thiagarajan
× RELATED தமிழ்நாட்டில் கூட்டணியை அதிமுக...