×

தமிழ்நாட்டில் கூட்டணியை அதிமுக முறித்த பிறகு அமித்ஷாவை இன்று சந்திக்கிறார் அண்ணாமலை: நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட அனுமதி கேட்கிறார்

சென்னை: தமிழ்நாட்டில் கூட்டணியை அதிமுக முறித்த பிறகு, அண்ணாமலை இன்று டெல்லி சென்று அமித்ஷா, நட்டாவை சந்திக்கிறார். அப்போது தமிழகத்தில் பாஜ தலைமையில் தனித்துப் போட்டியிட அனுமதி கேட்டு அறிக்கை அளிக்கிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக 4 அணிகளாக பிரிந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்திலும் பல்வேறு அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கனவே சோதனைகளை நடத்தி வந்தனர்.

பின்னர் விசாரணை நடவடிக்கைகள் எல்லாம் அப்படியே நின்று விட்டன. இதையடுத்து, மோடி, அமித்ஷா ஆகியோரது ஆதரவுடன் அதிமுகவினர் செயல்பட தொடங்கினர். டெல்லியில் நடந்த கூட்டணி கட்சிகளின் கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமியை மட்டுமே அழைத்தனர். அதேநேரத்தில் தமிழகத்தில் பாஜ தலைமையில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று தொடர்ந்து அண்ணாமலை வலியுறுத்தி வந்தார். இதற்கான நடவடிக்கைகளை அவர் எடுத்து வந்தார். இதற்கு மேலிடமும் அனுமதி அளித்தது. ஆனால், நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக பாஜவுக்கு எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது.

கர்நாடகா, இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜ தோல்வியடைந்தது. அதோடு இடைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்திலும் தோல்வி அடைந்தது. இதனால் பாஜ அதிர்ச்சி அடைந்தது. மேலும் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணியை தொடங்கினர். இந்த கூட்டணி உடையும் என்று பாஜ கணக்குப் போட்டது. ஆனால், நாளுக்கு நாள் கூட்டணி மீதான நம்பிக்கை அதிகரித்தது. மேலும், பல மாநிலங்களில் காங்கிரசுக்கு ஆதரவும் அதிகரிக்க தொடங்கியது. அதேநேரத்தில் தமிழகத்தில் பழைய கணக்குப்படி அதிமுகவுடன் அண்ணாமலை மோதி வந்தார்.

இதனால், அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி கூறியபோது எல்லாம் இருவரையும் மேலிடம் சமாதானப்படுத்தி வந்தது. ஒரு கட்டத்தில் அண்ணாமலை அதிமுகவினர் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று மிரட்டினார். அதோடு ஜெயலலிதாதான் மோசமான ஊழல் முதல்வர். அவரது ஆட்சிதான் ஊழல் நிறைந்தது என்று குறிப்பிட்டார். கடைசியில், அண்ணா பேசாத தகவல்களை பேசியதாக கூறி தமிழகத்தில் ஒரு பிரச்னையை உருவாக்கினார் அண்ணாமலை. இதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அண்ணாமலையை மாற்றியே ஆக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

ஆனால், டெல்லி மேலிடம் இதை ஏற்காததால், பாஜ கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் வெளியேறுவதாக அதிமுக தலைமை அறிவித்து விட்டது.இதனால் அதிர்ச்சி அடைந்த டெல்லி மேலிடம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அறிக்கை அளிக்கும்படி கேட்டுக் கொண்டது. அவர் அறிக்கையை நேற்று முன்தினம் அமித்ஷாவிடம் வழங்கியுள்ளார். இந்நிலையில் ஓரிரு நாட்களாக நடைபயணத்தை நிறுத்திய அண்ணாமலை கோவையில் முகாமிட்டுள்ளார். அவரை டெல்லிக்கு வரும்படி அமித்ஷா அழைத்துள்ளார்.

இதனால் இன்று காலை 9.15 மணிக்கு கோவையில் இருந்து அண்ணாமலை டெல்லி செல்கிறார். அங்கு அமித்ஷா, நட்டா, பி.எல்.சந்தோஷ் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார். அவர்களிடம் வழங்குவதற்கான ஒரு அறிக்கையை அண்ணாமலை தயாரித்துள்ளார். அந்த அறிக்கையில், தமிழகத்தில் பாஜ வளர்ச்சி அடைந்துள்ளது. அதிமுகவை தவிர மற்ற கூட்டணிக் கட்சிகள் எல்லாம் பாஜவுடன் கூட்டணி அமைக்க விரும்புகின்றன. தமிழகத்தில் பாஜ தலைமையில் கூட்டணி அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இந்த கூட்டணியில் பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, தமிழக முன்னேற்றக் கழகம், ஐஜேகே ஆகியவை இடம்பெறும். கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜ தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது.

அதில் தேமுதிக 14, பாமக, பாஜ, மதிமுக தலா 7 தொகுதிகள் மற்றும் ஏ.சி.சண்முகம், ஈஸ்வரன், ஐஜேகே ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டன. அதில் பாஜ 18 சதவீத ஓட்டுகளை பெற்றது. தற்போது தமிழகத்தில் பாஜ வளர்ச்சி அடைந்துள்ளது. அதோடு பல கட்சிகள் நம்முடன் இணைந்துள்ளன. இதனால் 23 முதல் 25 சதவீத ஓட்டுகளை பெற முடியும். குறைந்தது 3 முதல் 5 இடங்களை பாஜ பிடிக்கும். இதனால் தனித்துப் போட்டியிட அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியிருப்பதாக கூறப்படுகிறது.இந்த அறிக்கையின் அடிப்படையில், தனி அணி அமைத்துப் போட்டியிட பாஜ மேலிடத்தில் அனுமதி கேட்கிறார். டெல்லி அனுமதி அளித்தால் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ள பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

* நிர்மலா அறிக்கை தாக்கல்
கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது குறித்து அறிக்கை அளிக்கும்படி நிர்மலா சீதாராமனிடம் பாஜ மேலிடம் கேட்டுக் கொண்டது. அதை தொடர்ந்து, தமிழகம் வந்த நிர்மலா சீதாராமன், பாஜ நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு ஒரு அறிக்கையை மேலிடத்தில் வழங்கியுள்ளார். அதில் 2 கருத்துகளை தெரிவித்துள்ளார். முதலாவதாக அதிமுக கூட்டணியை மீண்டும் தொடர வேண்டும். அவர்களது நிபந்தனையை ஏற்றுக்கொள்ள வேண்டும் (அண்ணாமலையை மாற்றுவது), 2வதாக தற்போது அதிமுகவினர் பாஜ கூட்டணியை விமர்சிக்கவில்லை. நாமும் அவர்களை விமர்சிக்க வேண்டாம். இரு தரப்பும் அமைதி காப்போம்.

தற்போது 5 மாநில தேர்தல் வருகிறது. அதில் பாஜ வெற்றி பெற்றால், அதிமுக நம்முடன் மீண்டும் கூட்டணி வைக்க விரும்பும். அப்படி இல்லாமல் பாஜ தோற்றால், நாம் மீண்டும் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். அப்போது கூட்டணி வைத்துக் கொள்வது அல்லது தொகுதி உடன்பாடு மட்டும் வைத்துக் கொள்வது, அதுவரை அதிமுகவையோ, தலைவர்களையோ திட்டிப் பேசக்கூடாது என்று அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்து எச்சரித்து, அதிமுகவினரின் ஊழல்களை வெளியிடக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதிக்க வேண்டும். அதையும் மீறி அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று அதிமுக நிபந்தனை விதித்தால், மேலிடம் அதற்கான முடிவு எடுக்க வேண்டும். ஆனால் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால்தான் பாஜவுக்கு நல்லது என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

The post தமிழ்நாட்டில் கூட்டணியை அதிமுக முறித்த பிறகு அமித்ஷாவை இன்று சந்திக்கிறார் அண்ணாமலை: நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட அனுமதி கேட்கிறார் appeared first on Dinakaran.

Tags : Amitshah ,Tamil Nadu ,Anamalai ,Chennai ,Delhi ,Amitsha ,Nata ,
× RELATED வாய்ப்பு கேட்ட விஜயதரணி காத்திருக்க சொன்ன அமித்ஷா