×

324 மருத்துவமனைகளை தாக்கி அழித்த ரஷ்யா... உக்ரைனில் சுமார் 15,000 பேர் ரஷ்ய படைகளால் படுகொலை : அதிபர் ஜெலன்ஸ்கி

கீவ் ; உக்ரைனில் 50 நாட்களை கடந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள் 24 மணி நேரத்தில் 7 ராணுவ தளவாடங்களை தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது. நேட்டோவில் இணையும் உக்ரைன் மீது எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. தலைநகர் கீவ்வில் இருந்து பின்வாங்கிய ரஷ்ய படைகள் கிழக்கு பகுதியை குறிவைத்து முன்னேறி வருகின்றன.

அதன்படி மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் இறுதிக்கட்ட தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது. துறைமுகத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாக கூறியுள்ள ரஷ்யா, இதுவரை அங்கு 1160 உக்ரைன் வீரர்கள்  சரண் அடைந்ததாக தெரிவித்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வந்தாலும் ரஷ்யாவின் தாக்குதலை தடுத்து நிறுத்தும் அளவிற்கு அதிகமாகவும் விரைவாகவும் ஆயுதங்கள் தேவைப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். போர் தொடங்கியதில் இருந்து 324 மருத்துவமனைகளை ரஷ்யா தாக்கியதாகவும் அதில் 24 மருத்துவமனைகள் முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும் உக்ரைன் குற்றம் சாட்டுகிறது.

2014ம் ஆண்டு டான்பாஸ் பிரச்சனை தொடங்கியது முதல் தற்போது வரை உக்ரைனில் சுமார் 15,000 பேரை ரஷ்ய படைகள் படுகொலை செய்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். 2014ம் ஆண்டு டான்பாஸில் தாக்குதலை தொடங்கிய ரஷ்யா அந்நகரை கற்குவியலாகவே மாற்றிவிட்டதாகவும் அதிபர் சாடி உள்ளார். 2ம் உலக போரின் போது, ஏற்பட்ட அழிவின் அகோர காட்சிகளை போல் தற்போது டான்பாஸ் மாறிவிட்டதாக ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார். டான்பாசில் உயிருடன் ஒரு உக்ரைனியர் கூட இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு ரஷ்யா தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


Tags : Russia ,Ukraine ,Chancellor ,Zelansky , Hospital, Russia, Ukraine, Russian Forces, Assassination, President Zhelensky
× RELATED உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி