×

கமிஷன் விவகாரத்தில் ஒப்பந்ததாரர் தற்கொலை கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா: முதல்வர் பொம்மையை இன்று சந்தித்து கடிதம் கொடுக்கிறார்

பெங்களூரு: கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஎஸ் ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். முதல்வர் பசவராஜ் பொம்மையை இன்று சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுக்க இருக்கிறார். கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்த பாஜ ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல். இவர் ஊரக உள்ளாட்சிகளில் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் சந்தோஷ் பாட்டீல் அமைச்சர் ஈஸ்வரப்பாவை சந்தித்து டெண்டர் இன்றி பணிகள் செய்வதற்கு அனுமதி கோரியுள்ளார். பாஜவை சேர்ந்தவர் என்பதால், அமைச்சர் ஈஸ்வரப்பா பணி தரமாக இருக்க வேண்டும் எனக்கூறி அதற்கு அனுமதி  அளித்தார்.

இதையடுத்து 2021ம் ஆண்டு முதல் ரூ.4 கோடி செலவில் சாலை உள்ளிட்ட பணிகளை நகைகளை அடகுவைத்தும், கடன் வாங்கியும் சந்தோஷ் பாட்டீல் செய்து கொடுத்துள்ளார். ஆனால் இப்பணிகளுக்கான பில் தொகை எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. இதற்காக அதிகாரிகளிடம் அவர் முறையிட்டுள்ளார். ஆனால் அமைச்சர் கமிஷன் எதிர்பார்க்கிறார் என்று அவர்கள் அலைகழித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அமைச்சர் ஈஸ்வரப்பாவை நேரில் சந்தித்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் பில் தொகை கிடைக்கவில்லை என்று புலம்பியுள்ளார். அதற்கு அமைச்சர் ஈஸ்வரப்பா அவரிடம் 40 சதவீதம் கமிஷன் கேட்டதாக தெரிகிறது. பாஜ கட்சியை சேர்ந்த தன்னிடமே 40 சதவீதம் கமிஷன் கேட்டதால் சந்தோஷ் பாட்டீல் அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மையின் கவனத்துக்கு கொண்டு செல்ல முயற்சி மேற்கொண்டும் பலனளிக்கவில்லை. இதனால் வீட்டிலும் நிம்மதி இழந்து சந்தோஷ் பாட்டீல் தவித்து வந்துள்ளார்.

இந்த குழப்பத்தில் சில நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் சந்தோஷ் உடுப்பி சென்று அங்கே தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். அவரது செல்போனில் இருந்து பத்திரிகையாளர்களின் வாட்ஸ்அப்புக்கு டெத் நோட் குறுஞ்செய்தி வந்துள்ளது. இது குறித்து தகவல் வெளியானதும் போலீசார் விசாரணை நடத்த பெலகாவி சென்ற போது சந்தோஷ் பாட்டீல் வீட்டில் இல்லை . இதைத்தொடர்ந்து அவரது செல்போன் சிக்னலை வைத்து உடுப்பிக்கு சென்று விசாரணை நடத்திய போது அவர் தங்கியிருந்த அறையில் சந்தோஷ் பாட்டீல் சடலமாக மீட்கப்பட்டார். அப்போது தனது தற்கொலை முடிவுக்கு அமைச்சர் ஈஸ்வரப்பா தான் காரணம் என்று கடிதம் எழுதிவைத்திருப்பது தெரியவந்தது.

இப்பிரச்னை கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டிற்கு முன்பு இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தியதால் கட்சி மேலிடம் மாநில பாஜ தலைவர் நளின்குமாரிடம் விவரத்தை கேட்டு பெற்றனர். அமைச்சர் ஈஸ்வரப்பா பிரச்னை தேசிய அளவில் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் என கருதிய அமித்ஷா, அமைச்சர் ஈஸ்வரப்பாவிடம் ராஜினாமா கடிதம் பெறும் படி நளின்குமார் கட்டீலிடம் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

இந்த நிலையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஎஸ் ஈஸ்வரப்பா ஷிவமொக்காவில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளிக்கையில் ‘காண்டிராக்டர் சந்தோஷ் பாட்டீல் விவகாரத்தில் எனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. அதே நேரம் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இவ்விஷயத்தை அரசியலாக்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெண்டர் உள்ளிட்டவை குறித்து உரிய நடைமுறை உள்ளன. அதை மீறி எதுவும் செய்ய முடியாது. 40 சதவீதம் கமிஷன் கேட்காத நிலையில் எதற்காக என் மீது குற்றச்சாட்டு கூறப்படுகிறது என்பது தெரியவில்லை. அதே நேரம் கட்சியின் தலைமைக்கு நெருக்கடி ஏற்படக்கூடாது என்பதற்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். அதன்படி நாளை(இன்று) முதல்வர் பசவராஜ் பொம்மையை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுக்கிறேன்’. இவ்வாறு அவர் கூறினார். அமைச்சர் ஈஸ்வரப்பா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர் ராஜினாமா செய்த உடன் விசாரணையை தீவிரப்படுத்துவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

* பகல் - இரவு போராட்டம்
கான்டிராக்டர் தற்கொலை விவகாரத்தில் ஈஸ்வரப்பாவை கைது செய்ய வலியுறுத்தி  விதான சவுதா கிழக்கு வாசலில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பகல்-இரவு போராட்டம் தொடங்கியுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியதாவது: ‘காண்டிராக்டர் சந்தோஷ் பாட்டீல் யார் என்றே தெரியாது என அமைச்சர் ஈஸ்வரப்பா முதலில் கூறினார். எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட நிலையில் ஈஸ்வரப்பா பதவியில் நீடிப்பது மிகவும் தவறாகும். இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் விதான சவுதாவில் பகல் இரவு போராட்டத்தை தொடங்கியுள்ளோம்’ என்றார்.

Tags : Karnataka ,Minister ,Eeswarappa ,Chief Minister , Contractor commits suicide in commission affair Karnataka Minister Eeswarappa resigns: Chief Minister meets toy today and gives letter
× RELATED கர்நாடக அரசை கவிழ்க்க கேரள கோயிலில்...