×

இந்தியாவில் முதன்முறையாக 93 வயது முதியவருக்கு ரோபோட்டிக் இதய அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை சாதனை

சென்னை: இந்தியாவில் முதன்முறையாக 93 வயது முதியவருக்கு ரோபோட்டிக் இதய அறுவை சிகிச்சையை அப்போலோ மருத்துவமனை வெற்றிகரமாக செய்துள்ளது. இதுகுறித்து, அப்போலோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சுனிதா ரெட்டி கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்த 93 வயதான செல்லையா என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆஞ்சியோ பரிசோதனையில் அவரது இதய ரத்த நாளத்தில் கால்சியம் படிமம் உருவாகி அடைப்பு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. பொதுவாக, இளம் வயதினருக்கு ரத்த நாளத்தில் அவ்வாறு கால்சியம் படிமம் ஏற்பட்டாலே ஸ்டென்ட் உபகரணம் பொருத்தி நாளத்தை விரிவுபடுத்துவது இயலாத காரியம். 90 வயதை கடந்த ஒருவருக்கு அத்தகைய பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் திறந்த நிலை அறுவை சிகிச்சையோ அல்லது ஸ்டென்ட் உபகரணம் பொருத்துவதோ சாத்தியமில்லை. இதனால், அவரைக் காப்பாற்றுவதே சவாலாக இருந்தது. இந்த சூழலில்தான் அப்போலோ மருத்துவமனையில் ரோபோட்டிக் நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்படும் இதய தமனி பைபாஸ் சிகிச்சை (சிஏபிஜி) அவருக்கு அளிக்க திட்டமிடப்பட்டது.

இதயவியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.எம்.யூசுப், மயக்கவியல் துறை நிபுணர் டாக்டர் கணபதி ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரோபோடிக் உதவியுடன் கூடிய சிகிச்சையை அளித்தனர். வழக்கமான திறந்தநிலை சிகிச்சையைக் காட்டிலும் மிகக் குறைந்த நேரத்தில் நெஞ்சக பகுதியின் இரு இடங்களில் சிறு துளையிடப்பட்டு அதன் வாயிலாக சிகிச்சை வழங்கப்பட்டது. இதனால், அறுவை சிகிச்சையின்போது ஏற்படும் ரத்தப் போக்கு இதில் ஏற்படவில்லை.

அதேபோன்று வலி மற்றும் காயம் குணமாகும் காலம் அனைத்துமே குறைவாக இருந்தது. 93 வயதான முதியவருக்கு இத்தகைய சிகிச்சை முறை வெற்றிகரமாக செய்யப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதன்முறையாகும். சிகிச்சை முடிந்த நான்காவது நாளில் செல்லையா குணமடைந்து வீடு திரும்பினார். இதேபோன்று அச்சுதையா என்ற 86 வயது முதியவருக்கும் இத்தகைய சிகிச்சை சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : India ,Apollo Hospital , India, Robotic Heart Surgery for the Elderly, Apollo Hospital
× RELATED வலது தொண்டை குருதிக்குழாயில்...