×

திருவேற்காடு, திருச்செந்தூர், பழனி உள்பட 8 கோயில்களில் திருநீறு, குங்குமம் தயாரித்து வழங்கும் திட்டம்: அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, சா.மு.நாசர் தொடங்கி வைத்தனர்

சென்னை: பக்தர்களுக்கு தரமான திருநீறு மற்றும் குங்குமம் பிரசாதம் ஆகியவற்றை திருவேற்காடு, திருச்செந்தூர், பழனி உள்பட 8 கோயில்களில் தயாரித்து பிற திருக்கோயிலுக்கு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு, சா.மு.நாசர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருவள்ளுர் மாவட்டம், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கோயில் சார்பில் நவீன இயந்திரம் மூலம் தயார் செய்யப்பட்ட தரமான குங்குமம், திருநீறு பிரசாதம் வழங்குவதற்கான திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். விழாவில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலர் பி.சந்தரமோகன், ஆணையாளர் குமரகுருபரன், உயர் மட்ட குழு உறுப்பினர் தேசமங்கையர்க்கரசி, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில்  இணை ஆணையாளர் லெட்சுமண் மற்றும் இணை ஆணையாளர்கள் ஜெயராமன், பரஞ்ஜோதி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது கோயில்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்குத் தரமான திருநீறு மற்றும் குங்குமப் பிரசாதம் வழங்குவதற்காக 8 கோயில்களில் தயாரித்து, பிற கோயில்களுக்கு வழங்க ரூ.3 கோடி செலவில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக பழநி, தண்டாயுதபாணி சுவாமி கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களில் நவீன இயந்திரங்கள் மூலம் தரமான விபூதி தயார் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் நவீன இயந்திரங்கள் மூலம் தரமான குங்குமம் தயார் செய்யப்பட்டு பிற கோயிலுக்கு வழங்க திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. குன்றத்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வருகின்ற 25ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு வருகின்ற பக்தர்களுக்கு வாகனங்கள் நிறுத்துகின்ற இடம், பக்தர்களுக்கு போதிய அளவு பாதுகாப்புகள் வழங்குவது, குடிநீர், கழிப்பிட வசதி அமைப்புகளை ஏற்படுத்தி தருவது போன்றவை குறித்து ஆய்வு கூட்டத்தை நடத்த இருக்கிறோம். கூட்டத்தை விரைவில் நடத்தி பக்தர்களுக்கு தேவையான வசதியை செய்து தருவோம் என்றனர்.

Tags : Thiruverkadu ,Thiruchendur ,Palani ,Ministers ,BK Sekarbabu ,Samu Nasser , Project to produce and distribute saffron in 8 temples including Thiruverkadu, Thiruchendur and Palani: Ministers BK Sekarbabu and Samu Nasser initiated
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...