×

பட்டிவீரன்பட்டி, நத்தம் கோயில்களில் பங்குனிப் பொங்கல் திருவிழா

பட்டிவீரன்பட்டி/நத்தம், : பட்டிவீரன்பட்டி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. இத்திருவிழாவின் முதல் நாள் எல்லை காவல்கார சுவாமி பூஜை நடந்தது. அதன்பின் முத்துமாரியம்மனை சிங்க வாகனத்தில் மேளதாளம் முழங்க கோயிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து அம்மனுக்கு கண் திறந்து ஆடை தங்க ஆபரணங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 2ம் நாள் பொங்கல், அக்னிசட்டி எடுத்தல், மா விளக்கு எடுத்தல், பால்குடம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து 3ம் நாளான நேற்று முன்தினம் முத்துமாரியம்மன் சிங்க வாகனத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரி ஊர்வலத்துடன் வாணவேடிக்கைகள் மற்றும் மேளதாளம் முழங்க பூஞ்சோலைக்கு சென்றடைந்தது. அம்மன் பூஞ்சோலைக்கு சென்றடைதலுடன் திருவிழா நிறைவு பெற்றது.

லிங்கவாடி முத்தாலம்மன் கோயில் திருவிழா: நத்தம் அருகே, லிங்கவாடியில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் பங்குனிப் பொங்கல் திருவிழா நடந்தது. இதையொட்டி 15 நாள்களுக்கு முன், அழகர்மலை நூபுர கங்கையில் இருந்து புனித நீராடி வந்து முத்தாலம்மன் கோவில் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். கடந்த 6ம் தேதி சர்வ அலங்காரத்தில் வாண வேடிக்கையுடன் முத்தாலம்மன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோயில்களில் கருவறையில் வைக்கப்பட்டது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள்

மாவிளக்கு, முளைப்பாரி, அக்னிச்சட்டி, அங்கப் பிரதட்சணம், கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தினர். தொடர்ந்து மறுநாள் மாலையில் முத்தாலம்மன் பக்தர்கள் வெள்ளத்தில் பூஞ்சோலைக்கு சென்று இருப்பிடம் சேர்ந்தார். இதில் நத்தம், வத்திப்பட்டி, பரளி, தேத்தாம்பட்டி, வேம்பரளி, ரெட்டியபட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.



Tags : Pattiveeranbatti ,Pangunip Pongal Festival ,Nash Temples , Pattiviranapatti, Natham, Pangunip Pongal,
× RELATED மின்வாரிய அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை..!!