அன்னூர் : கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த கரியம்பாளையம் பகுதியில் மயிலேஸ்வரி என்பவருக்கு சொந்தமான பஞ்சு மில் குடோன் உள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக குடோன் கடந்த சில நாட்களாக இயக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று மாலை குடோனில் வைக்கப்பட்டிருந்த பஞ்சில் மின்கசிவு காரணமாக தீ பிடித்துள்ளது. சிறிது நேரத்தில் குடோன் முழுவதும் இருந்த பஞ்சுகளில் தீ பரவி மளமளவென ஏறிய தொடங்கியது.
இது குறித்து அருகில் இருந்தவர்கள் அன்னூர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் நிலைய அலுவலர் பாலச்சந்திரன் தலைமையில் வந்த வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குடோன் உட்புறத்தில் தீ பரவியதால் கட்டுப்படுத்துவதில் தீயணைப்பு வீரர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து 3 ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு குடோன் சுவர்கள் இடிக்கப்பட்டது. பின்னர் உட்புறத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு தீக்கிரையாகின. விபத்துக்கான காரணம் குறித்து அன்னூர் போலீசார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதேபோல் நேற்று கோவில்பாளையத்தில் காஸ் பங்க் அருகே உள்ள மரத்தில் தீப்பிடித்து எரிந்ததால் தீயணைப்பு துறையினர் அணைத்தனர். மேலும் மேட்டுப்பாளையம் சாலையில் ஜீவா நகர் பகுதி அருகே உள்ள முள் காடுகளில் தீப்பற்றி மளமளவென எரிந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று ஒரே நாளில் 3 இடங்களில் அன்னூர் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
