×

அரை டஜன் சிக்சருடன் 70 ரன் விளாசினார் பட்லர்

மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் 47 பந்தில் 70 ரன் விளாசினார். வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டு பிளெஸ்ஸி முதலில் பந்துவீச முடிவு செய்தார். பட்லர், ஜெய்ஸ்வால் இருவரும் ராஜஸ்தான் இன்னிங்சை தொடங்கினர். ஜெய்ஸ்வால் 4 ரன் மட்டுமே எடுத்து டேவிட் வில்லி வேகத்தில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். அடுத்து பட்லருடன் தேவ்தத் படிக்கல் இணைந்தார்.
பொறுப்புடன் விளையாடிய இருவரும் 2வது விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்தனர். படிக்கல் 37 ரன் (29 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் கோஹ்லியிடம் பிடிபட்டார். கேப்டன் சஞ்சு சாம்சன் 8 ரன் மட்டுமே எடுத்து வனிந்து ஹசரங்கா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். ராஜஸ்தான் 11.4 ஓவரில் 86 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.

இந்நிலையில், பட்லர் - ஹெட்மயர் ஜோடி நிதானமாகப் போராடி அணியை சரிவிலிருந்து மீட்டது. 16 ஓவர் முடிவில் அந்த அணியின் ஸ்கோர் 107/3 என ஆமை வேகத்தில் நகர்ந்ததால், ஆர்சிபி தரப்பு உற்சாகமடைந்தது. ஆனால், கடைசி கட்ட ஓவர்களில் டாப் கியரில் இயங்கிய இந்த ஜோடி, சிராஜ் வீசிய 19வது ஓவரில் 19 ரன்னும், ஆகாஷ் தீப் வீசிய கடைசி ஓவரில் 23 ரன்னும் சேர்க்க, ராஜஸ்தான் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன் குவித்தது. கடைசி 4 ஓவரில் மட்டும் ராஜஸ்தானுக்கு 62 ரன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. பட்லர் 70 ரன் (47 பந்து, 6 சிக்சர்), ஹெட்மயர் 42 ரன்னுடன் (31 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆர்சிபி பந்துவீச்சில் வில்லி, ஹசரங்கா, ஹர்ஷல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 170 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. டு பிளெஸ்ஸி, அனுஜ் ராவத் இருவரும் துரத்தலை தொடங்கினர்.

Tags : Butler , Butler hit 70 with half a dozen sixes
× RELATED பராக் – சாம்சன் அதிரடி வீண்; ராயல்சை வீழ்த்தியது குஜராத்