×

28 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பந்தாடியது சென்னை: ஆல் ரவுண்டர் ஜடேஜா அமர்க்களம்

தரம்சாலா: பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், 28 ரன் வித்தியாசத்தில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியது. இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/இரவு), டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ரகானே, கேப்டன் ருதுராஜ் இணைந்து சிஎஸ்கே இன்னிங்சை தொடங்கினர். ரகானே 9 ரன்னில் வெளியேற, ருதுராஜ் – டேரில் மிட்செல் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 57 ரன் சேர்த்தது.

ருதுராஜ் 32 ரன் (21 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), ஷிவம் துபே (0) இருவரும் ராகுல் சாஹர் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, சென்னை 69 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திடீர் சரிவை சந்தித்தது. மிட்செல் 30 ரன் எடுத்து (19 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ஹர்ஷல் படேல் வேகத்தில் அவுட்டானார். சிஎஸ்கே 8.5 ஓவரில் 75 ரன்னுக்கு 4வது விக்கெட்டை இழந்தது மேலும் பின்னடைவாக அமைந்தது.
மொயீன் அலி – ஜடேஜா இணைந்து 5வது விகெட்டுக்கு 26 ரன் சேர்த்தனர். மொயீன் 17 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

ஒரு முனையில் ஜடேஜா உறுதியுடன் போராட… சான்ட்னர் 11 ரன், ஷர்துல் தாகூர் 17 ரன்னில் வெளியேறினர். மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே களமிறங்கிய எம்.எஸ்.தோனி சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார். ஜடேஜா 43 ரன் (26 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அர்ஷ்தீப் பந்துவீச்சில் கரன் வசம் பிடிபட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 167 ரன் குவித்தது. துஷார் பாண்டே 0, ரிச்சர்ட் கிளீசன் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பஞ்சாப் பந்துவீச்சில் ராகுல் சாஹர், ஹர்ஷல் படேல் தலா 3, அர்ஷ்தீப் சிங் 2, சாம் கரன் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியது. பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோ இணைந்து துரத்தலை தொடங்கினர். பேர்ஸ்டோ 7, ரூஸோ (0) இருவரும் தேஷ்பாண்டே வேகத்தில் கிளீன் போல்டாக, பஞ்சாப் 2 ஓவரில் 9 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. பிரப்சிம்ரன் – ஷஷாங்க் சிங் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர்.

ஷஷாங்க் 27, பிரப்சிம்ரன் 30, ஜிதேஷ் 0, கேப்டன் சாம் 7, அசுதோஷ் 3 ரன் எடுத்து அணிவகுப்பு நடத்த… பஞ்சாப் 12.3 ஓவரில் 78 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. கடைசி கட்டத்தில் போராடிய ஹர்ஷல் படேல் 12, ராகுல் சாஹர் 16 ரன்னில் பெவிலியன் திரும்பினர். பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன் மட்டுமே எடுத்து, 28 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஹர்பிரீத் பிரார் 17 ரன், காகிசோ ரபாடா 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை பந்துவீச்சில் ஜடேஜா 4 ஓவரில் 20 ரன்னுக்கு 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். தேஷ்பாண்டே, சிம்ரன்ஜீத் தலா 2, சான்ட்னர், ஷர்துல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆல் ரவுண்டராக ஜொலித்த ஜடேஜா ஆட்ட நாயகன் விருது பெற்றார். சென்னை அணி 11 போட்டியில் 6வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியது.

The post 28 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பந்தாடியது சென்னை: ஆல் ரவுண்டர் ஜடேஜா அமர்க்களம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Punjab ,Jadeja Amarkalam ,Dharamsala ,Chennai Super Kings ,IPL league ,Punjab Kings ,Himachal Pradesh Cricket Association Stadium ,Dinakaran ,
× RELATED பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 28...