×

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அழகாகும் வேலூர் கோட்டை அகழியை கழிவுநீர் தொட்டியாக மாற்றும் சமூக விரோதிகள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

வேலூர்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அழகு பெற்று வரும் வேலூர் கோட்டை அகழியை குப்பைகளை கொட்டி கழிவுநீர் தொட்டியாக மாற்றும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ₹33 கோடி செலவில் கோட்டையை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கோட்டையின் இருசுற்றுகளில் மண்டியிருந்த முட்புதர்களும், செடி, கொடி, மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டு மக்கள் நடமாடும் வகையில் மாற்றப்பட்டுள்ளன.

கோட்டை நுழைவு வாயில் தொடங்கி உள்ளே உள்ள அனைத்து சாலைகளும் தார்ச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளது. கல் இருக்கைகள், வழிகாட்டி கற்கள், பழங்கால முறையிலான மின்விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுஉணவகம் கட்டும் பணியும் நடந்து வருகிறது. இதற்கு முன்னதாக கோட்டையை சுற்றி அமைந்துள்ள அகழியை நவீன மிதவை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணி நடந்தது. இப்பணி முடிவடைந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரமணாக அகழி முழுமையாக நிரம்பியது.

அதேநேரத்தில் கோட்டையில் சமூகவிரோதிகள் தெர்மாகோல்கள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகூளங்களை கொட்டி அகழியை கழிவுநீர் தொட்டியாகவே மாற்றி விட்டுள்ளனர். இதனால் கோட்டை அகழி அசுத்தமடைந்துள்ளது. இந்த குப்பைகளை தொல்லியல் துறையினரும், மாநகராட்சி பணியாளர்களும் அகற்றினாலும் மீண்டும் குப்பைகள் கொட்டப்படுவது தொடர்கதையாக உள்ளது. இச்செயல்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க கோட்டை அகழியை முழுமையாக கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்களை வைப்பதுடன்.

அகழியில் குப்பை கொட்டுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் அல்லது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Velur Fort , Anti-social elements to turn Vellore Fort moat into a septic tank in Smart City project: Public demand for action
× RELATED பக்தர்கள் தொடர்ந்து அவதி வேலூர்...