×

பக்தர்கள் தொடர்ந்து அவதி வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மீண்டும் புகுந்த அகழிநீர்-உபரிநீர் வெளியேறும் கால்வாய் தூர்வாரும் பணி பாதியில் நிறுத்தம்

வேலூர் : வேலூர் கோட்டை அகழி உபரிநீர் வெளியேறும் கால்வாய் தூர்வாரும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மீண்டும் தண்ணீர் புகுந்து தேங்கி நின்று பக்தர்களை அவதிக்குள்ளாக்கியுள்ளது.தொடர் மழை காரணமாக வேலூர் கோட்டை அகழி முழுவதுமாக நிரம்பியது. இதனால் அகழியில் நிரம்பிய மழைநீர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குள் சூழ்ந்தது. கடந்த மாதம் 29ம் ேததி கோயில் கருவறைக்குள் தண்ணீர் சென்றது. இவ்வாறு சேர்ந்த தண்ணீரை மோட்டார்கள் மூலம் அகற்றும் பணி கடந்த 9ம் தேதி வரை நடந்தது. இதில் கோயிலில் சேர்ந்த தண்ணீர் முழுவதும் வடிந்தாலும், மறுநாள் 10ம் தேதி கோயில் உட்பிரகாரத்தில் மீண்டும் தண்ணீர் சேர்ந்தது.

இந்த தண்ணீரும் மோட்டார்கள் மூலம் முழுவதும் வெளியேற்றப்பட்டு, 11ம் தேதி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இரண்டு நாட்கள் எந்த பிரச்னையும் இல்லாத நிலையில் மீண்டும் கோயிலுக்குள் நீர் ஊற்றெடுத்து தேங்கி நின்றது. இதனால் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தலின் பேரில் மீண்டும் கோயில் வளாகத்தில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்ததுடன், புதிய மீன் மார்க்கெட் அருகில் அகழியின் வெளிப்புற மதகில் இருந்து வெளியேறும் உபரிநீரை நிக்கல்சன் கால்வாயில் சேர்க்கும் கால்வாயும் 2 அடியில் இருந்து 5 அடியாக விரிவாக்கம் செய்யப்பட்டு உபரிநீரை அதிகளவில் விரைந்து வெளியேற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் அப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது. அதோடு அகழியில் இருந்து உபரிநீரை வெளியேற்ற ஷட்டர் திறப்பு முயற்சியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உபரிநீர் வெளியேறும் கால்வாயில் தண்ணீர் அப்படியே தேங்கி நிற்கிறது. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதேபோல் ஜலகண்டேஸ்வரர் கோயிலிலும் மீண்டும் தண்ணீர் புகுந்து முழங்கால் அளவு தேங்கி நிற்கிறது.

எனவே, அகழி உபரிநீர் வெளியேறும் வகையில் நிறுத்தப்பட்ட தூர்வாரும் பணியை தீவிரப்படுத்துவதுடன், அகழியின் உபரிநீர் வெளியேறும் ஷட்டரை திறக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிரந்தர தீர்வு எப்போது?

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர்  அசோக்குமாரிடம் கேட்டபோது, ‘நாளை (இன்று) காலை பொறியாளருடன் சென்று நேரில் பார்த்து தூர்வார வேண்டியது இருந்தால் நிச்சயம் அப்பணி தொடர்ந்து நடைபெறும். தண்ணீர் வேகமாக வெளியேறவும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் கேட்டபோது, ‘இது தொடர்பாக கமிஷனரிடம் பேசி, உடனடியாக அகழி நீர் வெளியேறவும், கோயிலில் சேர்ந்துள்ள தண்ணீரை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இவையெல்லாம் தற்காலிக நடவடிக்கையாக இருந்தாலும் அகழியில் உள்ள ஷட்டரை திறந்தால் மட்டுமே தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Jalakandeswarar Temple ,Avathi Velur Fort , Vellore: Work on the Vellore Fort moat overflow canal has been halted at Jalakandeswarar Temple.
× RELATED ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ...