2 ஆண்டுக்கு புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி இல்லை பொறியியல் படிப்புகளுக்கு இனி கணிதம் கட்டாயமில்லை: ஏஐசிடிஇ அறிவிப்பு

சென்னை: அடுத்த 2 ஆண்டுகளுக்கு புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி இல்லை எனவும், நடப்பு கல்வி ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் சில பிரிவுகளில் இனி கணிதப் பாடம் கட்டாயமில்லை எனவும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு வரை பொறியியல் படிப்புகளில் சேர,  பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் பெற்ற ‘‘கட் ஆப்’ மதிப்பெண்களை  பொறுத்து தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன்படி கலந்தாய்வு நடத்தப்பட்டு பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். இந்நிலையில் இந்தியாவில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த ஒன்றிய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு பாடங்களிலும் என்னென்ன இருக்க  வேண்டும் என்பதை புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் அகில இந்திய  தொழில்நுட்ப கவுன்சில் விதிமுறைகளை வகுத்துள்ளது.

அதன்படி 2022-23 கல்வி ஆண்டுக்கான உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கான, திருத்தப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் நேற்று வெளியிட்டது. அதன்படி கணினி அறிவியல், மின் மற்றும் மின்னணு  பொறியியல் படிப்புகளில் சேர 12ம் வகுப்பில் வேதியியல் படித்திருப்பது கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கட்டிட கலை, பேஷன் டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி, வேளாண் பொறியியல்,  உணவு பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் உள்ளிட்ட பொறியியல் பிரிவில் மூன்றில்  ஒரு பங்கு படிப்புகளில் சேருவதற்கு 12ம்  வகுப்பில் கணிதம் படித்திருக்க வேண்டும் என்பதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்  சேர்க்கை குறைந்து வருவதால் 2 ஆண்டுகளுக்கு புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி  இல்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொறியியல் பிரிவில் மூன்றில்  ஒரு பங்கு படிப்புகளில் சேருவதற்கு 12ம்  வகுப்பில் கணிதம் படித்திருக்க வேண்டும் என்பதில்லை.

Related Stories: