×

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா, சவுந்தர் பதவியேற்பு... தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!!


சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஒதுக்கபட்ட 75 நீதிபதிகள் பதவிகளில் 16 இடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களாக உள்ள 6 பேரை உச்ச நீதிமன்ற கொலிஜியம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி ஜனாதிபதிக்கு பரிந்துரைத்தது. அந்த பட்டியலில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான என்.மாலா, சுந்தர் மோகன், கே. குமரேஷ் பாபு, எஸ்.சௌந்தர், அப்துல் ஹமீத், ஆர்.ஜான் சத்யன் ஆகியோர் அங்கம் வகித்தனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் என்.மாலா மற்றும் எஸ்.சவுந்தர் ஆகியோரை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து,சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக இன்று பதவியேற்ற என்.மாலா மற்றும் சவுந்தர் ஆகியோருக்கு தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.புதிய நீதிபதிகளை அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் உள்ளிட்டோர் வரவேற்று பேசினர்.பின்னர் புதிய நீதிபதிகள் ஏற்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், அரசு பிளீடர் பி.முத்துக்குமார்,  உயர் நீதிமன்ற பதிவாளர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களின் பதவிக்காலம் பதவியேற்றதில் இருந்து இரண்டாண்டுகள் ஆகும். என்.மாலா புதுச்சேரி அரசு பிளீடராக கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ரிட் மற்றும் அரசியலமைப்பு வழக்குகளில் நல்ல திறமை படைத்தவர். எஸ்.சவுந்தர் ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கடாச்சல மூர்த்தியின் ஜூனியராக பணியாற்றியவர். மயிலாடுதுறையை சேர்ந்த இவர் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தவர். பின்னர் சட்டப் படிப்பில் முதுநிலை படிப்பையும் முடித்துள்ளார். இவர் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர்.இரண்டு கூடுதல் நீதிபதிகள் நியமனத்தினால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்ததுடன் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 14 ஆக குறைந்துள்ளது.



Tags : N. Mala ,Saundar ,Chennai High Court ,Chief Justice ,Muniswarnath , Chennai, High Court, Additional, Judges, N.Mala, Saundar
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...