சென்னை: திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட ஜமாலியா பள்ளியின் அருகே கால்பந்து மைதானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, திரு.வி.க. நகர் தாயகம் கவி (திமுக) பேசும்போது, ‘‘விளையாட்டு வீரர்கள் அதிகம் உள்ள திரு.வி.க. நகரில் உள்ள ஜமாலியா பள்ளியின் அருகே விளையாட்டு மைதானம் ஒன்று இருந்தது. கடந்த ஆட்சியில் இந்த மைதானம் மாநகராட்சி வாகனம் மற்றும் கழிவு பொருட்கள் சேகரிக்கும் இடமாக மாற்றப்பட்டது. பலமுறை கோரிக்கை வைத்தும் அது அகற்றப்படவில்லை. இந்த விளையாட்டு மைதானத்தில் விளையாடிய கால்பந்தாட்ட வீரர்கள் சர்வதேச, இந்திய, மாநில அளவில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அதனால், அங்குள்ள பழைய பொருட்களை அகற்றி விளையாட்டு திடலாக மாற்றித்தர வேண்டும்” என்றார்.
அதற்கு பதிலளித்து பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், ‘‘விளையாட்டுத்துறை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அறிவிப்பாக உலக சதுரங்க போட்டி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், 200 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கும் உலக சதுரங்க போட்டி தமிழகத்தில் நடைபெறுவது இந்தியாவுக்கே பெருமை. மேலும், சர்வதேச தரத்திலான 5 மைதானங்கள் சென்னையில் உள்ளது. உறுப்பினர் கூறிய திரு.வி.க.நகர் ஜமாலியா பள்ளி அருகே 7 பேர் விளையாடும் கால்பந்து போட்டிகள் நடத்துவதற்கான விளையாட்டு மைதானம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்” என்றார்.