×

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்

காஞ்சிபுரம்: உலகப்பிரசித்தி பெற்ற அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் ஆண்டுதோறும் விமரிசையாக நடக்கும். இந்தாண்டு கடந்த 8ம்தேதி விழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்த அலங்கரிக்கப்பட்ட சூரியபிரபை, சிம்மவாகனம், சந்திரபிரபை, பூதவாகனம், நாக வாகனம், வெள்ளி அதிகார நந்தி சேவை, வெள்ளி இடப வாகனம் போன்ற வாகனங்களில் ஏகாம்பரநாதர் வீதியுலா வந்து அருள்பாலித்தார். இதுபோல் கடந்த 13ம்தேதி 63 நாயன்மார்கள் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தனர். அன்றிரவு ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார்குழலி அம்மன் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

14ம்தேதி காலை  ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி  அம்மன் மரத்தேரில் வாணவேடிக்கை முழங்க முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்தனர். வழிநெடுகிலும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆறுமுகப்பெருமான் எடுப்பு ரத காட்சி, குதிரை வாகனம், ஆள் மேல் பல்லக்கு போன்ற கோலங்களில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று வெள்ளி மாவடி சேவை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் இன்று அதிகாலை 5 மணி நடைபெற்றது. இதில் ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார்குழலி அம்மன் திருமண கோலத்தில் வாணவேடிக்கை, பேண்ட் வாத்தியம், மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர்  மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Panguni Uttara Tirukkalyana ,Ekambaranathar temple ,Kanchipuram , Panguni Uttara Tirukkalyana celebration at Ekambaranathar temple in Kanchipuram
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.20.25 லட்சம் வசூல்