காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறையில் கடந்த 2012ம் ஆண்டு நேரடி நியமன உதவியாளர்களாக பலர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு சரியான முறையில் பதவி உயர்வு அளிக்கப்படவில்லை எனவும், போதிய தகுதிகள் இருந்தும் வெளி மாவட்டத்தில் இருந்து வட்டாட்சியர்களை பணி நியமனம் செய்வதை கண்டித்தும் தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப்-2 நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கலெக்டர் நுழைவாயில் முன்பு நேற்று நடைபெற்றது.
மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இதில், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலகில், பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்க நில எடுப்பு அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டு, புதிதாக 29 வட்டாட்சியர் காலிபணியிடங்களும், இதர 15 வட்டாட்சியர் பணியிடங்களும் என மொத்தம் 44 காலி பணியிடங்கள் இருந்தது. மேலும், முழு தகுதி வாய்ந்த 47 துணை வட்டாட்சியர்கள், இம்மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் அரசு விதிகளின்படி தகுதி அடிப்படையில் இவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும்.
இதேபோல் காவல்துறை பயிற்சி நிலையங்களில் உள்ள 2023ம் ஆண்டு துணை வட்டாட்சியர்களுக்கும் தொடர்ந்து காவல்துறை பயிற்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும், வெளி மாவட்டத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட்டாட்சியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சுதாகர், மாவட்ட பொருளாளர் சங்கர், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பூபாலன், தமிழ்நாடு நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில நிலைய செயலாளர் தியாகராஜன், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post வெளிமாநில வட்டாட்சியர்களை நியமிக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.